India vs Nepal asian-games 2023 | indian-cricket-team | nepal: சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை முதல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மங்கோலியா, ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, ஹாங்காங், தாய்லாந்து, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 14 அணிகள் களமாடியுள்ளன. இதில் 9 அணிகளை ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ - பிரிவில் நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா அணிகளும், பி - பிரிவில் கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் அணிகளும், சி - பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. மீதமுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஏ, பி, சி பிரிவுகளில் இருந்து 4 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகளில் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்ற 5 அணிகளுடன் மோதும். அவ்வகையில், இன்று முதல் நடக்கும் கால்இறுதிப் போட்டியில் இந்த 8 அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. வெற்றியை ருசிக்கும் அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 2 அரைஇறுதிப் போட்டிகளும் அக்டோபர் 6ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 7ம் தேதியும் நடக்கிறது.
இந்தியா - நேபாளம் அணிகள் மோதல்
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முதலாவது கால்இறுதிப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி ரோஹித் பவுடல் தலைமையிலான நேபாளம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தின. ஹாங்சோ நகரின் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியானது இன்று காலை 6:30 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் ஜெய்ஸ்வால் அதிரடியில் வெளுத்து வாங்கினார். அவர் அரைசதம் விளாசிய நிலையில் மருமமுனையில் இருந்த கேப்டன் ருதுராஜ் 4 பவுண்டரிகளை விரட்டி 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். அவர் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த ரிங்கு சிங் - சிவம் துபே ஜோடியில், ரிங்கு சிங் 4 சிக்ஸர்களை விளாசி 37 ரன்களுடனும், 2 பவுண்டரி ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட சிவம் துபே 25 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி நேபாளம் அணி வீரர்களில் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. களமாடி வீரர்கள் அனைவருமே சிக்ஸர்களை பறக்க விட்டாலும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக 4 சிக்ஸர்களை விளாசிய திபேந்திர சிங் ஐரி 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“