India vs Nepal | U19 World Cup 2024: ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன், போட்செப்ஸ்ட்ரூம், கிம்பெர்லி, ஈஸ்ட் லண்டன், பெனோனி ஆகிய நகரங்களில் கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லீக் சுற்று
இந்த ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
சூப்பர் 6 சுற்று
இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, நேபாளம், அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2ல் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதியில் வெற்றியை ருசிக்கும் அணிகள் பிப்ரவரி 11ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இந்தியா - நேபாளம் ஜூனியர் அணிகள் மோதல்
இந்நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் குரூப் -1ல் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா - நேபாளம் ஜூனியர் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 6 போட்டி ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த உதய் சஹாரன் தலைமையிலான இந்திய ஜூனியர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் தாஸ் 101 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்தார். கேப்டன் உதய் சஹாரன் 107 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார். நேபாளம் அணி தரப்பில் அதிகபட்சமாக குல்சன் ஜா 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
இடி, மின்னல் - போட்டி நிறுத்தம்
இந்தியாவுக்கு எதிராக 298 ரன்களை துரத்த நேபாளம் தயாரான நிலையில், இடி, மின்னல் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. மைதானம் மிகவும் இருண்டதாக உள்ளது. மழை இல்லாததால் ஆடுகளமும் மைதானம் இன்னும் மூடப்படவில்லை. ஸ்டம்புகள் இடத்தில் உள்ளன மற்றும் மின்னல் நிறுத்தத்திற்காக காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி மாலை 6:15 மணிக்கு பிறகு போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படலாம்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்திய ஜூனியர் அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, ஆராத்யா சுக்லா
நேபாள ஜூனியர் அணி: அர்ஜுன் குமால், தீபக் போஹாரா, உத்தம் தாபா மாகர் (விக்கெட் கீப்பர்), தேவ் கனல் (கேப்டன்), பிஷால் பிக்ரம் கே.சி, தீபக் தும்ரே, குல்சன் ஜா, திபேஷ் கண்டேல், சுபாஷ் பண்டாரி, ஆகாஷ் சந்த், துர்கேஷ் குப்தா
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Nepal Live Score, U19 World Cup 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.