Hockey World Cup 2018, When and Where to Watch India vs Netherlands Match: உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று இரவு 7 மணிக்கு மோதுகின்றன.
ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த நவ.28ம் தேதி தொடங்கியது.
இந்தியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய 16 அணிகள் பங்கேற்றன.
இந்தியாவில் இம்முறை உலகக் கோப்பை நடைபெறுவதால், ரசிகர்களின் பேராதரவிற்கு மத்தியில் இந்திய அணி இம்முறை களமிறங்கியது.
சிறப்பாக ஆடிய இந்திய அணி, தற்போது காலிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் தொடரை நடத்தும் இந்திய அணி, வலுவான நெதர்லாந்துடன் மோதுகிறது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடைசியாக இந்திய அணி கடந்த 1975-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. அந்தத் தொடருக்குப் பின் இந்திய அணி 43 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதிப் பெறவில்லை என்பது பெரும் சோகம்.
ஆனால், இந்தியா எதிர்கொள்ளவிருப்பது நெதர்லாந்து அணியை. இந்தியாவைவிட பல மடங்கு பலம் வாய்ந்த நெதர்லாந்தை வீழ்த்துவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.
உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணி, நெதர்லாந்தை வீழ்த்தியதே கிடையாது. அந்த அணியுடன் 6 முறை மோதியுள்ள இந்திய அணி ஒரு ஆட்டத்தை மட்டுமே டிரா செய்திருந்தது. மற்ற 5 ஆட்டங்களிலும் தோல்வியே மிச்சம்.
இன்று, அந்த தோல்விக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை, மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தும் பட்சத்தில், 43 வருடங்களுக்குப் பிறகு அரை இறுதியில் கால்பதித்து ஹாக்கி வரலாற்றில் புதிய சாதனை படைக்கலாம்.
ஒரு சாதகமான விஷயம் என்னவெனில், கடைசியாக இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோதிய ஆட்டம் 1-1 என டிரா ஆனது என்பதே. நமது வீரர்கள் கூடுதலாக சற்று எஃபோர்ட் போட்டால், நிச்சயம் நாம் வெற்றிப் பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்தியா, நெதர்லாந்து இடையேயான காலிறுதிப் போட்டி, ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டியை DD Sports-ல் ஹிந்தி வர்ணனையுடன் பார்க்கலாம். அதுமட்டுமின்றி, Star Sports 1 மற்றும் Star Sports 1 HD சேனலில் ஆங்கில வர்ணனையுடன் போட்டியை காணலாம்.
இதுதவிர, ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மற்றும் International Hockey Federation-னின் யூடியூப் பக்கத்திலும் போட்டியை லைவாக கண்டு ரசிக்கலாம்.
இந்தியா வெற்றிப் பெற்று புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துவோம்!.
மேலும் படிக்க - ‘என்னது... இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லையா?’