India vs Netherlands World Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (நவ.12) ஒருநாள் உலகக் கோப்பை இன்னிங்ஸில் ஐந்து டாப் ஆர்டர் பேட்டர்களும் அரை சதம் அடித்த முதல் அணி என்ற வரலாறு படைத்தது.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி அரிய மைல்கல்லை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர்.
ரோகித் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கில் 51 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து, விராட் கோலி தனது 71வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை அடித்தார், அதே நேரத்தில் கேஎல் ராகுலும் அரை சதம் அடித்தார். இதுவரை ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியில் முதல் ஐந்து பேட்டர்கள் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது நிகழ்வு ஆகும். கடந்த காலங்களில் 2013ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் விளையாடிய போதும், 2020ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா இந்தியா விளையாடிய போதும் இது நடந்துள்ளது.
அதாவது, ரோகித் சர்மா (61), சுப்மன் கில் (51), விராட் கோலி (51) ஆகியோர் அரை சதமும், ஷ்ரேயாஸ் ஐயர் (128*), கே.எல்.ராகுல் (102) ரன்னும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“