India vs New Zealand (IND vs NZ) Live Score, 1st Test Day 4 Match Today: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை முதல் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand Live Score, 1st Test Day 2
2-வது நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இந்நிலையில், பெங்களுருவில் நடைபெறவிருந்த முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (அக்.17) 2-வது நாள் ஆட்டம் மேகமூட்டத்துடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அம்பயர் காலில் தப்பித்த கேப்டன் ரோகித் சர்மா அடுத்த சில நிமிடங்களில் டிம் சௌதி பந்தில் 7-வது ஓவரில் 2 ரன் மட்டுமே எடுத்து போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 9 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த சர்ஃபராஸ் கானும் மேட் ஹென்றி பந்தில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த சூழலில், மைதானத்தில் மழை பொழிவு தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, இந்திய அணி 12.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 13 ரன்கள் எடுத்து இருந்தது. இதன்பிறகு தொடங்கி நடந்த ஆட்டத்தில், நியூசிலாந்து பவுலிங்கை சமாளிக்க முடியமால் இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
முன்னணி வீரர் கே.எல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். 2 பவுண்டரியை விரட்டிய ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தார். ஒரு பவுண்டரியை விரட்டிய சிராஜ் 4 ரன்னுடன் களத்தில் இருக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பேட்டிங்கில் அதிரடியாக ரன் சேர்க்க தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கில் மிரட்டி எடுத்த நியூசிலாந்து அணி தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டையும், வில்லியம் ஓரூர்கே 4 விக்கெட்டையும், டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வரும் நிலையில், அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம் - டெவோன் கான்வே ஜோடி களமாடினர். இந்த சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தனர். 17 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில், 15 ரன்கள் எடுத்த கேப்டன் டாம் லாதமை குலதீப் தனது சுழலில் சிக்க வைத்தார்.
அடுத்த வந்த வில் யங்குடன் தொடக்க வீரர் கான்வே ஜோடி அமைத்து அரைசதம் அடித்தார். இருவரும் விறுவிறுவென ரன்களை எடுத்த நிலையில், 5 பவுண்டரிகளை விரட்டிய வில் யங் 33 ரன்னுக்கு அவுட் ஆனார். களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் கான்வே சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் சுழலில் சிக்கிய அவர் 91 ரன்களுக்கு அவுட் ஆனார்.
களத்தில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் இருக்க 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து, இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலையில் இருந்தது
3-வது நாள் ஆட்டம் - நியூசிலாந்து பேட்டிங்
3-வது நாள் ஆட்டத்தில், தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டேரல் மீச்செல் 18 ரன்களுக்கும், ப்ளூந்தல் 5 ரன்களுக்கும், பிலிப்ஸ் 14 ரன்களுக்கும், ஹென்ரி 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார்.
உணவு இடைவேளைக்கு முன்பாக, நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு, 345 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 299 ரன்கள் முன்னிலை பெற்றது. 125 பந்துகளை சந்தித்த ரவீந்திரா 104 ரன்களுடனும், சவுதீ 50 பந்துகளில் தலா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணியில், அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த டீம் சவுதி, 73 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஜாஸ் பட்டேல் 4 ரன்களில் வெளியேறினார். இறுதிக் கட்டத்தில் அதிரடியில அசத்திய ரச்சின் ரவீந்திரா பவுண்டரிகளாக விரட்டி ரன்கள் குவித்தார். 150 ரன்களை நோக்கி நகர்ந்த அவர், 157 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்சருடன் 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் 91.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, குல்தீப் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதனையடுத்து, 356 ரன்கள் பின்தங்கிய நிலயில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாட தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஜெய்ஸ்வால் 6 பவுண்டரியை விரட்டி 35 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த கேப்டன் ரோகித் அரைசதம் அடித்து 63 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன்பிறகு, களத்தில் இருந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதானம் கலந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். ஆனால், 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் 102 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்த கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை விட 125 ரன்கள் பின்னிலையில் இருந்தது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
4-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில், களத்தில் இருந்த சர்பராஸ் கான் அடுத்த வந்த ரிஷிப் பண்ட்டுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதில் சர்பராஸ் கான் 133 ரன்களில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அவர் விளாசும் முதல் சதம் இதுவாகும். அவருடன் ஜோடி அமைத்திருக்கும் பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இருவரும் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், இந்திய அணி ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. நியூசிலாந்தை விட பின்னிலையில் இருந்த இந்தியாவை, இவர்களின் பார்ட்னர்ஷிப் முன்னேற செய்தது.
இந்த ஜோடியில் பவுண்டரி, சிக்ஸர் என பட்டையைக் கிளப்பிய சர்பராஸ் கான் 195 பந்துகளில் 18 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பாக்கப்பட்ட பண்ட் 99 ரன்னில் அவுட் ஆகி சோகமாக வெளியேறினார். இதன்பிறகு வந்த வீரர்களில் யாரும் பெரிதும் சொக்கபிக்காமல் சொற்ப ரன்னுக்கு நடையைக் கட்டினர். இறுதியில், 2வது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 99.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 462 ரன்கள் குவித்து, நியூசிலாந்தை விட 107 ரன்கள் முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 107 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த நியூசிலாந்து அதன் 2வது இன்னிங்சில் களமாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டாம் லதாம் மற்றும் கன்வே ஜோடி களமிறங்கினர். போட்டியில் 4 பந்து வீசப்பட்ட நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இருவரும் தங்களது ரன் கணக்கை தொடங்காமல் களத்தில் இருப்பதால், நியூசிலாந்துக்கான வெற்றி இலக்கும் அப்படியே உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு வழக்கம் போல் 5ம் நாள் ஆட்டம் தொடங்கும். இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால், கடைசி நாள் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
5-ம் நாள் ஆட்டம்
மழை காரணமாக 5 ஆம் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. லாதம் டக் அவுட் ஆனார். அவர் பும்ரா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து யங் களமிறங்கி சற்று அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடி வந்த டெவன் கான்வே 17 ரன்களில் அவுட் ஆனார். அவர் பும்ரா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். யங்- ரவீந்திரா ஜோடி சிறப்பாக ஆடி இலக்கை எட்டியது. 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.
யங் 45 ரன்களுடனும், ரவீந்திரா 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
பிளேயிங் லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
நியூசிலாந்து: டாம் லாதம்(கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல்(விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ஓரூர்கே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.