'நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து 5-0 என்று டி20 தொடரில் இந்தியா வீழ்த்திவிட்டது' என்று பல பத்திரிக்கைகளில் விளையாட்டு பக்கங்களின் தலையங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்த வார்த்தைகளை விராட் கோலி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
புதிதாக சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்பவர்களுக்கும் நியூசிலாந்துக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டிருப்பவர், ஒருநாள் திடீரென்று ஏறி சீட்டில் உட்கார்ந்து விடுவார். சைக்கிளை பேலன்ஸ் செய்து உட்கார்ந்த மகிழ்ச்சியில் மின்னல் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருப்பார். ஆனால், எப்படி இறங்குவது என்பது அவருக்கு தெரியாது. ஏதாவது ஒரு பள்ளத்திலோ, புதரில் இருந்தோ தான் அவரை மீட்டெடுக்க முடியும். அது போலத் தான் நியூசிலாந்து. நன்றாக இன்னிங்ஸ் தொடங்கினார்கள், வெற்றி வெற்றி என்று முழங்கிவிட்டு, அய்யயோ! எப்படி ஜெயிக்குறது-னு தெரியலையே என்று தோற்றிருக்கிறார்கள். இளம் வீரர்கள் அதிகம் கொண்டிருந்த நியூஸி., அணி பல்வேறு பாடங்களை இத்தொடரில் கற்றிருக்கும்.
இன்று மீம்களில் ஆக்கிரமித்திருப்பவர் லோகேஷ் ராகுல் தான். வீரர்களின் விமானத்தை இயக்கும் பைலட்டின் பணியில் இருந்து அம்பயர் பணி வரை அனைத்தையும் செய்து முடித்து கிரிக்கெட் ரசிகர்களின் புது நாயகனாக அவதாரமெடுத்து இருக்கிறார்.
நியூசிலாந்தின் பெரும் பலவீனமாக அமைந்தது அனுபவமில்லாத, ஆக்ரோஷமில்லாத பவுலிங் தான்.
இந்த செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சோகமான தகவல் என்னவெனில், காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆனா, இந்த ராஸ் டெய்லர் ரொம்ப பாவம்யா!! ரெண்டு சூப்பர் ஓவர் மேட்சுலயும் கடைசி ஓவர் வரை நம்ம டெய்லர் நின்றும் ஒண்ணும் பண்ண முடில... மனுஷன் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு!.
அண்ணன் ஷர்துள் தாகூர் அப்படி இப்படின்னு இந்த டி20 சீரிஸ ஓட்டுனது ஒரு சரித்திர நிகழ்வாக பதிவாகி இருக்கிறது. எதுக்காக அவர் டீமுல இருக்காரு-னு அவருக்கும் தெரியல, நமக்கும் தெரியல...! இருந்தாலும் வாழ்த்துகள் ப்ரோ!!
சஞ்சு.... சஞ்சு... ரெண்டு மேச்சு உங்களுக்கு அருமையாக ஓப்பனிங் வாய்ப்பு கிடைச்சும் தவறிப் போச்சு!! ராகுல், இந்த மாதிரி எத்தனையோ மேட்சை கோட்டை விட்டதுண்டு சஞ்சு... ஏன், ரோஹித்துக்கு கொடுக்காத வாய்ப்பா!! ரோஹித்துக்கு கொடுத்த அதே அளவு வாய்ப்பை உத்தப்பாவுக்கும் கொடுத்திருந்தா, அவரும் இன்று தவிர்க்க முடியாத வீரராக உருவாகியிருப்பார்.
ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் விலகியிருப்பது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு தான். ரோஹித்துக்கு மாற்று வீரராக யார் விளையாட வேண்டும் என்பது குறித்த உங்கள் சாய்ஸ் யார்?
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் புதன்கிழமை (ஜன.5) தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.