இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ராஞ்சியில் நடைபெற்றுவரும் 2வது டி20 போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஜெய்ப்பூரில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில், கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல, நியூசிலாந்து அணியில், : மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி (கேப்டன்), ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்டி கப்டில் அதிரடியாக விளையாடி 15 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் பந்தில் ரிஷப் பண்ட் இடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். அவருடன் களம் இறங்கிய டேரில் மிட்செல் நிதானமாக விளையாடினார். இவருடன் ஜோடி சேர்ந்த மார்க் சாப்மன் 21 ரன் எடுத்திருந்த நிலையில், அக்சர் பட்டேல் பந்துவீச்சில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து டேரில் மிட்செல் 31 ரன் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்தில் சூர்ய குமார் யாதவிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து, கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரையடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் 13 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 3 ரன்னிலும், ஆட்டமிழந்து வெளியேறினார்கள். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை எடுத்தது. அந்த அணியில், மிட்செல் சேன்ட்னர் 8 ரன்களுடனும் ஆடம் மில்னே 5 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய தொடரைக் கைப்பற்றலாம் என்பதால் இந்திய அணி 154 ரன் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடினார்கள். கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து 49 பந்துகளுக்கு 6 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 65 ரன் எடுத்திருந்தபோது டிம் சௌதி பந்தில் கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா இருவரும் 117 ரன்கள் குவித்தனர். இதையடுத்து வெங்கடேஷ் ஐயர் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா, 36 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்திருந்தபோது, டிம் சௌதி பந்தில் மார்டின் கப்டில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, களத்திற்கு வந்த சூர்ய குமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்து டிம் சௌதி பந்தில் போல்ட் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெங்கடேஷ் ஐயர் 12 ரன்னுடனும் ரிஷப் பண்ட் 12 ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்த்யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.