India vs New Zealand (IND vs NZ) 2nd Test Day 3 Match Highlights: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs NZ 2nd Test Day 3 Live Cricket Score
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பந்து வீசியது. இப்போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. முதல் போட்டியில் ஆடிய கே.எல்.ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ்க்கு பதிலாக ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க முயன்ற இந்த ஜோடியில், 2 பவுண்டரியை விரட்டிய கேப்டன் டாம் லாதம் 15 ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார். அடுத்து வந்த வில் யங் 18 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்தில் கீப்பர் பண்ட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்பின்னர், களத்தில் இருந்த தொடக்க வீரர் டெவோன் கான்வே-வுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி அமைத்தார். இந்த ஜோடி தங்களது நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விரட்டி இந்திய பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்தனர். இருவரும் அபாரமாக அரைசதம் அடித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs NZ 2nd Test Live Cricket Score
நீண்ட இடைவெளிக்குப் பின், இந்த ஜோடியில், 141 பந்துகளில் 11 பவுண்டரிகளை மட்டுமே விரட்டி 76 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் டெவோன் கான்வே விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அவருடன் ஜோடி அமைத்து 105 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 65 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார்.
இதன்பிறகு களம் புகுந்த டாம் ப்ளூன்டெல் (3 ரன்), டேரில் மிட்செல் (18 ரன்) ஆகியோரது விக்கெட்டையும் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். அடுத்த வந்த வீரர்களில் கிளென் பிலிப்ஸ் மட்டும் 33 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த மிட்செல் சான்ட்னர் (9 ரன்) மற்றும் அவருக்கு பின் வந்த டிம் சவுத்தி (5), அஜாஸ் பட்டேல் (4) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்த அனைத்து வீரர்களின் விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் தான் வீழ்த்தினார். மொத்தமாக அவர் 7 விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் வில்லியம் ஓர்ர்கே ரன் எதுவும் எடுக்காமல் இருக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டையும் இழந்த நியூசிலாந்து 79.1 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்தது.
இந்தியா பேட்டிங்
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆட இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களம் புகுந்த நிலையில், 9 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 6 ரன்னுடனும், கில் 10 ரன்னுடனும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து இந்தியா நியூசிலாந்தை விட 243 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
2-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் இந்தியாவுக்காக பேட்டிங்கை தொடங்கினர். 15 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து இந்த ஜோடியில் 30 ரன்னுக்கு எல்.பிடபிள்யூ அவுட் ஆனார் கில். இதேபோல், 4 பவுண்டரியை விரட்டிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்த களமிறங்கி வீரர்களில் கோலி ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
இதன்பிறகு களம் புகுந்த ரிஷப் பண்ட் 18 ரன்னுக்கும், சர்பராஸ் கான் 11 ரன்னுக்கும் அவுட் ஆகி நடையைக் கட்டினார். அஸ்வின் சான்ட்னர் சுழலில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரவீந்திர ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஜடேஜா 38 ரன்னுக்கு அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
18 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் மட்டும் களத்தில் இருக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை விட 103 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டையும், டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நியூசிலாந்து பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம் - டெவோன் கான்வே ஜோடி களமாடினர். இதில் டெவோன் கான்வே 17 ரன்னுக்கும், அடுத்து வந்த வில் யங் 23 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதன்பிறகு, தொடக்க வீரர் கேப்டன் டாம் லாதம் ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் 9 ரன் எடுத்த ரச்சின் ரவீந்திரா வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி வெளியேறினார்.
இதனிடையே அரைசதம் அடித்த தொடக்க வீரர் கேப்டன் டாம் லாதம் அடுத்து வந்த டேரில் மிட்செல் உடன் பார்ட்னர்ஷிப் போட்டார். இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து டேரில் மிட்செலை 18 ரன்னுக்கு வெளியேற்றினார் வாஷிங்டன் சுந்தர். இதேபோல், தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய பவுலர்களுக்கு தலைவலி கொடுத்து வந்த தொடக்க வீரர் கேப்டன் டாம் லாதம் விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார். மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டாம் லாதம் 133 பந்துகளில் 10 பவுண்டரிகளை விரட்டி 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
டாம் ப்ளூன்டெல் (30 ரன்கள்) - கிளென் பிலிப்ஸ் (9 ரன்) ஜோடி களத்தில் இருக்க, 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 301 ரன்கள் முன்னிலை வகித்தது.
3-ம் நாள் ஆட்டம் நியூசிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இன்று சனிக்கிழமை முதல் 3வது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. டாம் ப்ளூன்டெல் - கிளென் பிலிப்ஸ் ஜோடி பேட்டிங் ஆட களமாடியது. இந்தியாவுக்கு பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முயாமல், டாம் ப்ளூன்டெல் 41 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
கிளென் பிலிப்ஸ் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, நியூசிலாந்து அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 255 எடுத்தது. இதன் மூலம், இந்திய அணிக்கு 358 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதனையடுத்து, இந்திய அணி 359 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமாடியது. தொடக்க வீரர்களாக களமாடிய ரோகித் - ஜெய்ஸ்வால் ஜோடியில், கேப்டன் ரோகித் 8 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.
கில் (23 ரன்), கோலி (17 ரன்), பண்ட் (0), சர்பராஸ் கான் (9 ரன்) போன்ற வீரர்கள் பெரும் ஏமாற்றம் அளித்தனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் சுழலில் மாயாஜாலம் காட்டிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரன சான்ட்னெர் இந்தியாவின் விக்கெட்டை கொத்தாக கைப்பற்றினார்.
இறுதி கட்டத்தில் ஜடேஜா (42 ரன்கள்) போராடியும் பலனில்லை. முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பத்திலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மேலும், நியூசிலாந்து இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை முதன் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓர்ர்கே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.