இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் பேட்டிங்கை பார்த்து ரோகித் சர்மா ஆச்சரியமடைந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3- போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது பரபரப்பான ஃபார்மில் உள்ள சுப்மான் கில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார். இதில் மதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்த நிலையில், சுப்மான் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 108 ரன்களில் சுருட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இதனிடையே 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய 23 வயதான கில், லாக்கி பெர்குசன் வீசிய 8-வது ஓவரை அடித்து நொறுக்கினார். இந்த ஓவரில் கில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். கில்லின் பேட்டிங் கேப்டன் ரோஹித்தை வியக்க வைத்தது.
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) January 24, 2023
அந்த ஓவரின் வைட், ஷார்ட் ஆஃப் லெங்த் வந்த முதல் பந்தை நேராக தரையில் கீழே ஓட்டி, மிட்-ஆஃப் பவுண்டரிக்கு அடித்தார். 2-வது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 3-வது பந்தில், பந்து எட்ஜ் தாண்டி பவுண்டரி எல்லையை கடந்தது. 4-வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய கில் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி அசத்தினார். தொடர்ந்து கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய கில், அந்த ஓவரில் 22 ரன்கள் குவித்து அசத்தினார்.
கில் பேட்டிங்கை மறுமுனையில் இருந்து பார்த்துக்கொண்டிந்த ரோகித் சர்மா வியந்துபோனார். இந்த போட்டியில்கில் 72 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியா 25 ஓவர்களுக்குள் 200 ரன்களை எட்டியது, அது சமயம் ரோகித் கில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனனர். கில் 112 ரன்களும் ரோகித் சர்மா 108 ரன்களும் எடுத்தனர்.
ஒருநாள் தொடருக்குப் பிறகு, நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா நடத்துகிறது. மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்குப் பிறகு, இந்தியா ஆஸ்திரேலியாவுடன் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/