இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியிலும் ராஞ்சியில் நடந்த 2வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில்தான், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
3 டி20 போட்டிகளில் ஒரு போட்டியிலாவது ஆருதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து அணியும் கடைசியைப் போட்டியையும் வென்று கிளீன் ஸ்வீப் செய்ய வேண்டும் என்று இந்திய அணியும் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அண்யில் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். ரோஹித் சர்மாவும் இஷான் கிஷானும் அதிரடியாக விளையாடினார்கள். 6 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது. 7வது ஓவரை வீசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் இரண்டாவது பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்த இஷானை அவுட் ஆக்கினார். கடைசி பந்தில் சூர்யகுமாரை டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து பந்து வீசிய சான்ட்னர் 4 ரன் எடுத்திருந்த ரிஷப் பண்ட்டை அவுட் ஆக்கினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நியூசி பந்துகளை விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டர்களுடன் 56 ரன் எடுத்திருந்த போது சோதி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, இதையடுத்து வந்த வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 25, வெங்கடேஷ் ஐயர் 20 ரன் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினர். ஹர்ஷல் படேல் 18, தீபக் சாஹர் 21 ரன் எடுத்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது.
185 ரன் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டிலும் டேரில் மிட்செலும் களம் இறங்கினார்கள். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்கள். டேரில் மிட்செல் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த மார்க் சாப்மேனும், கிளென் பிலிப்ஸும் டக் அவுட் ஆகி நியூசிலாந்து அணியின் தோல்வியை உறுதி செய்தார்கள். ஆனாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மார்டின் கப்டில் 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடித்து 51 ரன்கள் எடுத்திருந்தபோது யுஸ்வேந்திர சாஹல் பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதற்கு பிறகு நியூசிலாந்து அணி வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் 17 ரன், ஜெம்ஸ் நீஷம் 3, மிட்செல் சாண்ட்னர் 2, ஆடம் மில்னே 7, சோதி 9, பெர்குசன் 14 சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ட்ரெண்ட் போல்ட் மட்டும் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கேட்டுகளையும் இழந்து 111 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணி தரப்பில், அக்சர் படேல் 3, ஹர்ஷல் படேல் 2 விக்கேட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியை நிலைகுலையச் செய்தார்கள்.
இதன் மூலம், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்று கிளீன் ஸ்வீப் செய்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார். கேப்டனாக சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருது பெற்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.