India vs New Zealand, Champions Trophy 2025 Final Dubai Pitch Report and Weather Forecast:
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கி நடைபெற உள்ளது.
துபாய் பிட்ச் ரிப்போர்ட்
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 23 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் தான், இந்தியா - நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கும் பயன்படுத்த இருக்கிறார்கள். அதனால், இறுதிப் போட்டி நடக்கும் துபாய் ஆடுகளத்துக்கும் பாகிஸ்தானும் ஒருவகையில் தொடர்பு வந்துள்ளது.
சமீபத்திய தகவல்களின் படி, துபாயில் உள்ள பிட்ச்களுக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இரண்டு வார ஓய்வு அளித்துள்ளது. இருப்பினும், ஐ.எல்.டி20 (ILT20) போட்டியைத் தொடர்ந்து, குறைந்த ஆடுகளங்கள் மட்டுமே அவர்கள் வசம் இருப்பதால், இறுதிப் போட்டிக்கு அதிகாரிகள் மந்தமான ஆடுகளத்தை பெற்றுள்ளார்கள்.
இறுதிப் போட்டியில் ஆடுகளத்தின் தாக்கம்
துபாயின் அதிகரித்து வரும் வெப்பநிலை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், இப்போது தயார் செய்யப்பட்டுள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மேற்பரப்பு மூடிய நிலையில் உள்ளது. இது தொடர்பாக ஆடுகளம் தயாரிப்புகளை நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ஐ.எல்.டி20 தொடரின் போது கூட, மைதான ஊழியர்கள் ஆடுகளங்களுக்கு சரியான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடந்து வந்தாலும், வெளிப்புற மைதானமும் கவனமாக பராமரிக்கப்பட்டது. அதில் பசுமையான மேற்பரப்பை உறுதி செய்யப்பட்டது" என்று அவர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ஐ.சி.சி கோப்பைக்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் போராடும்போது, ஆடுகளத்தின் நிலைமைகள் அந்த அணிகளின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
துபாய் வெதர் ரிப்போர்ட்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி அரங்கேறும் துபாயில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு, வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது, போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள் முடிவடையும் போது, வெப்பநிலை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துபாயில் மேகமூட்டமான வானிலை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி மீதமுள்ள நாள் முழுவதும் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர்.
நியூசிலாந்து: வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திர, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், டேரில் மிட்செல், நாதன் ஸ்மித், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி.