Advertisment

IND vs NZ: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து; 25 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது போட்டியிலும் வெற்றி

அஜாஸ் படேலின் அசத்தல் பந்துவீச்சால் இந்தியாவுக்கு எதிரான 3 வது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும் தொடரை 3-0 என கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Test match

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து புனேவில் நடந்த 2வது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Advertisment


ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand 3rd Test Day 3 Live Cricket Score: NZ beat IND by 25 runs and win series 3-0 in Mumbai

 

முதல் நாள் ஆட்டம் - நியூசிலாந்து பேட்டிங் 

இந்நிலையில், போட்டியின் முதல் நாளான அன்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம், டெவோன் கான்வே ஜோடி களமிறங்கிய நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இந்திய பவுலர் ஆகாஷ் தீப். அவரது பந்தில் தொடக்க வீரர் கான்வே 4 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த வில் யங்குடன் ஜோடி அமைத்தார் கேப்டன் டாம் லாதம். இந்த ஜோடியில் 3 பவுண்டரிகளை விரட்டி 28 ரன்கள் எடுத்த கேப்டன் டாம் லாதம் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி வெளியேறினார். 

இதேபோல், அடுத்து வந்த ரச்சின் ரவீந்திராவும் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த டேரில் மிட்செல் உடன்  களத்தில் இருந்த வில் யங் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். ஓவருக்கு ஒரு பவுண்டரி என இந்திய பவுலர்களுக்கு தலைவலி கொடுத்து வந்தனர். 

இந்த ஜோடியை உடைக்க இந்திய பவுலர்கள் திணறி வந்தனர். வில் யங் அரைசதம் அடித்து தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். இந்த சூழலில் 44.1 ஓவரில் அவருக்கு ஜடேஜா பந்து வீசவே, பந்து எட்ஜ் அடித்து முதல் ஸ்லிப்பில் இருந்த ரோகித் சர்மாவிடம் தஞ்சமடைந்தது. வில் யங் 138 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த டாம் ப்ளூன்டெலுடன் டேரில் மிட்செல் ஜோடி அமைத்த நிலையில், அவரை அதே ஓவரில் 5-வது பந்தில் எல்.பி.டபிள்யூ அவுட் எடுத்தார் ஜடேஜா. இதன்பிறகு களத்தில் ஆடி வந்த டேரில் மிட்செல் - க்ளென் பிலிப்ஸ் ஜோடியில் 17 ரன்னுக்கும், அடுத்து வந்த இஷ் சோதி 7 ரன்னுக்கும், மாட் ஹென்றி ரன் எதுவும் இன்றியும் ஆட்டமிழந்தார். இவர்களின் விக்கெட்டையும் ஜடேஜா தான் கைப்பற்றி மிரட்டினார். 

அடுத்து வந்த அஜாஸ் படேலுடன் தொடக்க வீரர் ஜோடி அமைத்தார் தொடக்க வீரர் டேரில் மிட்செல். நீண்ட நேரம் களத்தில் தனி ஒருவனாக ஆடி வந்த  டேரில் மிட்செல் 129 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

அஜாஸ் படேல் அடுத்து வந்த வில்லியம் ஓர்ர்கே இணைந்த நிலையில், அஜாஸ் படேல் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி அவுட் ஆனார். வில்லியம் ஓர்ர்கே மட்டும் களத்தில் இருக்க, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நியூசிலாந்து அணி 65.4 ஓவர்களில் 235 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டையும்,  ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்தியா பேட்டிங் 

இதனைத் தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆட களமாடியது. தொடக்க வீரர்களாக வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடியில், அதிரடியாக ஆட முயன்ற ரோகித் 3 பவுண்டரியை விரட்டி 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

அவருக்குப் பின் வந்த சுப்மன் கில் களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலுடன் சிறிது நேரம் தாக்குபிடிக்கவே, ஜெய்ஸ்வால் 30 ரன்னுக்கு அவுட் அவுட் ஆனார். இன்றைய ஆட்ட நேரம் முடிவு பெற 5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், நேரத்தை கடத்த பவுலர் சிராஜ் பேட்டிங் ஆட வந்தார். ஆனால், அவரின் விக்கெட்டை அஜாஸ் படேல் வீழ்த்தினார். அவரது விக்கெட்டுக்குப் பின் விராட் கோலி களம் புகுந்த நிலையில், 4 ரன்கள் எடுத்த அவர் ரன் அவுட் ஆகி பரிதமாக வெளியேறினார். 

சுப்மன் கில் 31 ரன்னுடனும், ரிஷப் பண்ட்  1 ரன்னுடனும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 19 ஓவருக்குள் 4 விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி 86 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை விட 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 

2-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங் 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை 2- ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த கில் - பண்ட் ஜோடியில் இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். அவர்களின் சிறப்பான ஆட்டம் மூலம் இந்தியாவின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இந்த ஜோடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நிலைத்து நின்று ஆடிய சூழலில் இஷ் சோதி பந்தில் எல்.பி.டபிள்யூ அவுட் ஆனார் பண்ட். தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்தார். 

இதன்பிறகு களம் புகுந்த ஜடேஜாவுடன் கில் ஜோடி அமைத்தார். 10 ஓவர்கள் கூட தாக்குபிடிக்காத இந்த ஜோடியில், ஜடேஜா 14 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த சர்பராஸ் கான், அஜாஸ் படேல் வீசிய அடுத்த ஓவரில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அணிக்காக தனி ஆளாக போராடி வந்த கில் சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்க நிலையில், அவர் 146 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

இதன்பிறகு வந்த ரவிச்சந்திரன் அஷ்வின் (6 ரன்), ஆகாஷ் தீப் (0) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்து இருக்க,  இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 59.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. 

நியூசிலாந்து பேட்டிங் 

தொடர்ந்து, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய கேப்டன் டாம் லாதம் 1 ரன்னுக்கும், டெவோன் கான்வே 22 ரன்னும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 4 ரன் நிலையில், அஸ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் கீப்பரால் ஸ்டெம்ப் அவுட் ஆனார். இதன்பிறகு, வில் யங் - டேரில் மிட்செல் ஜோடி அமைந்தனர். 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில், 21 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல் அஸ்வின் பந்தில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

அடுத்து வில் யங் -   டாம் ப்ளூன்டெல் ஜோடி சேர்ந்தனர். நியூசிலாந்து 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது.  டாம் ப்ளூண்டெல் 4 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த யங் – கிளன் பிலிப்ஸ் இருவரும் நிதானமாக ஆடினார். பிலிப்ஸ் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்தில் போல்டானார். அடுத்து வந்த சோதி 8 ரன்களில் அவுட் ஆனார். 

அடுத்ததாக ஹென்றி களமிறங்கிய நிலையில், சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசிய யங் 51 ரன்களில் அவுட் ஆனார். அவர் அஸ்வின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அஜீஸ் படேல் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஹென்றி 10 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஜடேஜா பந்தில் போல்டானார். நியூசிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் இந்திய அணியை விட 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து:

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் நியூசிலாந்து அணி தனது விக்கெட்டை விரைவாக இழந்தது. அஜாஸ் படேல் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. 

அதன்படி, இந்திய வீரர்களான ரோகித் ஷர்மா 11 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பன்ட் மட்டும் ஒற்றை ஆளாக போராடி 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சர்ஃபரஸ் கான் 1 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 6 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், அஷ்வின் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் ஆகியார் ரன்கள் ஏதும் எடுக்காமல் முதல் பந்துகளிலேயே ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளும், க்ளென் ஃபிலிப்ஸ் 3 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 1 விக்கெட்டும் கைப்பற்றினர். மேலும், ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை அஜாஸ் படேலும், ப்ளேயர் ஆஃப் தி சீரிஸை வில் யங்கும் பெற்றனர்.
 
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ். 

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment