India vs New Zealand World Cup 2023: இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோற்காத இரண்டு அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (அக். 22) தரம்சாலாவில் உள்ள அழகிய இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை செய்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: India vs New Zealand Live Score, World Cup 2023
இந்தியா vs நியூசிலாந்து அணிகள் இடையேயான இந்த போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் அடைந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி அணியில் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த போட்டியில் விரலில் காயம் ஏற்பட்டதால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. இதனால, டாம் லாதம் கேப்டனாக பொறுப்பேற்று செயல்படுவார் என்று தெரிகிறது.
உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் நியூசிலாந்தும் 9 முறை மோதியுள்ளன. அதில், நியூசிலாந்து அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதனால், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளின் பட்டியல்.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹம்மது ஷமி, மொஹம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்:
டாம் லாதம் (பொறுப்பு கேப்டன்), மார்க் சாப்மேன், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவிந்திரா, டெவான் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
India vs New ZealandScore Updates:
இந்த உலகக் கோப்பை தொடரில் 21-வது போட்டியாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று (அக். 22) தரம்சாலாவில் உள்ள அழகிய இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக் காரர்களான டெவான் கான்வே, வில் யங்க் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். நிதானமாக விளையாடிய டெவான் கான்வே ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே 3.3-வது ஓவரில் முஹம்மது சிராஜ் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து, ரச்சின் ரவிந்திரா பேட்டிங் செய்ய வந்தார்.
நியூசிலாந்து அணி 8.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்திருந்தபோது, வில் யங்க் 27 பந்துகளில் 17 ரன் எடுத்திருந்த நிலையில், சிராஜ் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, டேரில் மிட்செல் பேட்டிங் செய்ய வந்தார்.
ரச்சின் ரவிந்திரா - டேரில் மிட்செல் நிதானமாக பேட்டிங் செய்து விளையாடினர். ஷமி பந்தில் ஜடேஜா கேட்ச் தவற விட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரச்சின் நன்றாக விளையாடி அரை சதம் அடித்தார். ரச்சினைத் தொடர்ந்து, மிட்செல்லும் அரை சதம் அடித்து அசத்தினார்.
இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர், மிட்செல் அடித்த பந்தை பும்ரா கேட்ச் பிடிக்காமல் கோட்டை விட்டார்.
நியூசிலாந்து அணி 33.3 ஓவரில் 178 ரன் எடுத்திருந்தபோது, ரச்சின் ரவிந்திரா 87 பந்துகளில் 75 ரன் அடித்திருந்த நிலையில், முஹம்மது ஷமி பந்தில் சுப்மன் கில் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, டாம் லாதம் பேட்டிங் செய்ய வந்தார்.
டாம் லாதம் வந்த வேகத்திலேயே 5 ரன் மட்டும் எடுத்து, குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, கிளென் பிலிப்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில், சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 40.5 ஓவரில் 100 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
கிளென் பிலிப்ஸ் 23 ரன் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் ரோஹித் சர்மா விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, மார்க் சாப்மேன் பேட்டிங் செய்ய வந்தார்.
சாப்மேன் 6 ரன் அடித்திருந்த நிலையில், பும்ரா பந்தில் கோலி யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து, சாண்ட்னர் பேட்டிங் செய்ய வந்தார். சாண்ட்னரும் 1 ரன் மட்டுமே எடுத்து, ஷமி பந்தில் போல்டு அவுட் ஆகி வெளியெறினார். அடுத்து, வந்த ஹென்றி சந்தித்த ஷமியின் முதல் பந்திலேயே போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஃபெர்குசன் பேட்டிங் செய்ய வந்தார்.
127 பந்துகளில் 130 ரன் எடுத்திருந்த டேரில் மிட்செல், ஷமி பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில், ஷமி 5 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் கில் களமிறங்கினார். ரோகித் சர்மா தொடக்க முதலே அதிரடி காட்டினார். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். மறுமுனையில் சிறிது நேரம் நிதானம் காட்டிய கில், பின்னர் அதிரடிக்கு மாறினார். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடி வந்த ரோகித் 46 பந்துகளில் அவுட் ஆனார். அவர் பெர்குசன் பந்தில் போல்டானார். ரோகித் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசியிருந்தார். அடுத்ததாக கோலி களமிறங்கிய சிறிது நேரத்தில் கில் 26 ரன்களில் அவுட் ஆனார். பெர்குசனின் அடுத்த ஓவரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து கில் அவுட் ஆனார்.
அடுத்ததாக ஸ்ரேயாஸ் களமிறங்கி, பவுண்டரிகளாக விளாசினார். இதனால் இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. அப்போது அதிக பனிமூட்டம் காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சிறிது நேரத்தில் பனிமூட்டம் விலகியதை அடுத்து, ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஸ்ரேயாஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் போல்ட் பந்தில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக கோலியுடன் ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ராகுல் 27 ரன்களில் அவுட் ஆனார். அவர் சாண்ட்னர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
அடுத்ததாக சூர்யகுமார் களமிறங்கிய சிறிது நேரத்தில், கோலி அரைசதம் அடித்து அசத்தினார். சூர்யகுமார் 2 ரன்களில் ரன் அவுட் ஆக, ஜடேஜா உள்ளே வந்தார். கோலி – ஜடேஜா ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. இந்திய அணி 269 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி அவுட் ஆனார். கோலி 95 ரன்களில் ஹென்றி பந்தில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்தார். கோலி 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசினார்.
அடுத்து ஷமி களமிறங்கி 1 ரன் எடுத்த நிலையில், இந்திய வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்களையும், போல்ட், ஹென்றி, சாண்ட்னர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் இதுவரை தோல்வியை கண்டிராத அணியாக புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.