IND vs NZ, Bengaluru M Chinnaswamy Stadium Weather Report: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டிக்கு மழை அச்சறுத்தல் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கும் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில நாட்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பின்படி, அக்டோபர் 14 மற்றும் அக்டோபர் 17 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மற்றும் 2 ஆம் நாளில் 70-90% மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“