ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே வெற்றிகரமாக அடக்கிய பிறகு, கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜன.23) நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து சென்ற இந்திய அணிக்கு விமான நிலையத்திலேயே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேப்பியர் மெக்லீன் பார்க்:
நீர் வடிகால் பிரச்சனை காரணமாக சர்வதேச போட்டிகளை நடத்தும் அந்தஸ்தை இழந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகள் உட்பட எந்த சர்வதேச கிரிக்கெட்டும் நடத்தப்படாமல் இருந்த நேப்பியர் மெக்லீன் மைதானத்தில் தான் இந்தியாவும், நியூசிலாந்தும் முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. 2017 Feb 2ம் தேதியன்று இங்கு கடைசியாக ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதுவும், மழை காரணமாக டாஸ் கூட போட முடியாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகு, ஏறக்குறைய 2 வருடங்கள் ஆகியிருக்கும் இந்தச் சூழலில் மீண்டும் இந்த மைதானத்தில் மோதுவதால், இரு அணி வீரர்களுக்குமே மைதானத்தின் தற்போதைய நிலவரம் குறித்த பெரிய சந்தேகம் உள்ளது.
கடைசியாக 2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி நேப்பியரில் விளையாடிய போது, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்தின் 293 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, விராட் கோலியின் சதத்தின்(123) உதவியால் 268 ரன்கள் எடுத்ததே தவிர, சேஸிங் செய்ய முடியாமல் தோற்றது.
மெக்லீன் பார்க் Curator தரப்பில் இருந்து பிட்ச் ரிப்போர்ட் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், வேகப்பந்து வீச்சுக்கே இந்த பிட்ச் கைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (vc), ஷுப்மன் கில், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (WK), விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல் அஹ்மத், முகமது ஷமி, முகமது சிராஜ்.