நியூசிலாந்துக்கு திருப்பித் தர வேண்டிய நேரம் இது! - கோலி இல்லாமல் சாதிப்பாரா ரோஹித்?

India vs New Zealand T20 2019 Online Streaming: ஹாமில்டனில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அமைந்த ஸ்விங் பிட்ச் போன்று மீண்டும் அமைந்தால்...

India vs New Zealand T20 Live Streaming Online: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு, இந்திய அணி டி20 எனும் அடுத்தக் கட்ட சவாலை சந்திக்க உள்ளது. சவால் என்றால் சாதாரண சவால் அல்ல!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜன.6) வெலிங்டனில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி வென்றுவிட்டது, முதல் மூன்று போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை திக்குத் தெரியாமல் அடித்து வென்றது.

ஆனால், ஹாமில்டனில் நடைபெற்ற நான்காவது போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி பிரம்மாண்டத் தோல்வியை தழுவியது. நியூசி பவுலர் போல்ட் வேகத்தில் இந்தியாவின் நெட் கழண்டது.

வெலிங்டனில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும், 18-4 என பரிதவித்த இந்திய அணி, மிடில் ஆர்டரின் பொறுப்பான இன்னிங்ஸ் மற்றும் பாண்ட்யாவின் இறுதிக் கட்ட அதிரடியால் கௌரவமான இலக்கை (253) நிர்ணயித்தது. சிறப்பான பந்துவீச்சு மற்றும் களவியூகத்தால் அந்தப் போட்டியை வென்று 4-1 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, நியூசிலாந்தில் மாபெரும் ஒருநாள் டாமினேஷனை அரங்கேற்றியது.

இப்போது கதை வேறு… டி20. இந்திய மண்ணிலேயே இந்திய பவுலர்களை புரட்டி எடுத்து சதம் விளாசிய காலின் மன்ரோ ஆடும் களம் இது. தவிர, நியூசிலாந்துக்கு எதிரான டி20 எனும் சரித்திர பக்கத்தை திருப்பினால், இந்தியாவின் ஆளுமை அங்கு அதலபாதாளத்தில் உள்ளது.

இதுவரை இந்தியாவும், நியூசிலாந்தும் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், 2 போட்டியில் மட்டுமே இந்தியா வென்றிருக்கிறது. வெற்றிச் சதவிகிதம் 25.00.

ஐசிசியில் முழு நேர மெம்பர்களாக உள்ள அணிகளில், நியூசிலாந்திடம் மட்டுமே இந்திய அணி இவ்வளவு குறைவான டி20 வெற்றி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

எல்லா அணிகளிலும் இருப்பது போன்று, நியூசிலாந்திலும் அதிரடி வீரர்கள், சொதப்பல் வீரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் முடிவு என்னவோ நியூசிலாந்து பக்கமே அமைந்துவிடுகிறது.

‘டிராக் ரெக்கார்ட் பத்திலாம் கவலை வேண்டாம். இப்போ இந்தியன் டீம் இருக்குற ஃபார்ம்ல, நிச்சயம் கப் நமக்கு தான்’ என்று நாம் சொல்லலாம். ஆனால், ஹாமில்டனில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அமைந்த ஸ்விங் பிட்ச் போன்று மீண்டும் அமைந்தால், இந்தியாவிற்கு அது நிச்சயம் பெரிய தலைவலியாகத் தான் இருக்க முடியும். கேப்டன் ரோஹித் ஷர்மாவே இதை ஒப்புக் கொள்வது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இருப்பினும், ஹாமில்டன் போன்ற ஸ்விங் பிட்சான வெலிங்டனில், ஐந்தாவது போட்டியில், ஆரம்பத்தில் இந்தியா தடுமாறினாலும், பிறகு பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிப் பெற்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:

ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், எம் எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்\ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ்\க்ருனல் பாண்ட்யா, விஜய் ஷங்கர்\குல்தீப், சாஹல், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது.

நியூசிலாந்திற்கு எதிரான தங்களது முந்தைய மோசமான சாதனைகளை திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு உள்ளது. அதுவும், விராட் கோலி துணையின்றி. அதேசமயம், ஒருநாள் தொடரில் அனுபவித்த வேதனையை, டி20ல் இந்தியாவுக்கு திருப்பிக் கொடுக்க நியூசிலாந்தும் மெகா தீவிரம் காட்டும்.

ஆக, இந்த டி20 தொடர் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்திய நேரப்படி நாளை(ஜன.6) மதியம் 12:30 மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்குகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close