ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், ரிசர்வ் டே-யிலும் மழை பாதிக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புகள் கூறுகின்றன.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளன. கடந்த வாரம், பல்லேகலேயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் குழுநிலை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன. இம்முறை கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத உள்ள நிலையில், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பிளாக்பஸ்டர் மோதலுக்கான ரிசர்வ் நாளை சேர்த்தது. ”ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 இன் போட்டிக்கான ரிசர்வ் டே இணைக்கப்பட்டுள்ளது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே செப்டம்பர் 10 ஆம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பாதகமான வானிலை காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆட்டத்தின் போது ஆட்டம் இடை நிறுத்தப்பட்டால், செப்டம்பர் 11, 2023 போட்டி தொடரும்" என்று ACC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆசிய ஜாம்பவான்களின் மோதலுக்கான எதிர்பார்ப்பு உருவாகி வருவதால், வானிலை நிலைமைகள் போட்டியின் மீது கவலையை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் விளையாட்டு நாள் மற்றும் ரிசர்வ் நாள் இரண்டிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புகள் கூறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடியுடன் கூடிய மழைக்கு 90-100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் நாளில், இடியுடன் கூடிய மழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது, என Weather.com தெரிவித்துள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் முறையே 94 மற்றும் 95 சதவீத மேக மூட்டத்துடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அக்குவெதர் கணித்துள்ளது.
சூப்பர் 4 கட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமே ரிசர்வ் டேயைக் கொண்டுள்ளது. இதனிடையே, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளின் பயிற்சியாளர்கள், இந்த விதி விலக்கு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மோதல், ஒளிபரப்பாளர்களுக்கு அதிக வருவாயைக் கொண்டுவருகிறது என்பதை மனதில் வைத்து இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.