India vs Pakistan | cricket | sports: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் ஒதுக்கப்பட்ட லீக் போட்டிகள் முடிந்து விட்டன. லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
சூப்பர்4 சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையில் நடக்கிறது. இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியானது இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் பாகிஸ்தான் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா (56 ரன்கள்) - சுப்மன் கில் ஜோடி (58 ரன்கள்) அரைசதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்த விராட் கோலி - கே.எல். ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். ஆட்டத்தில் 24.1 வது ஓவர் வீசப்பட்ட போது மழை குறுக்கிட்டது. பின்னர் அந்த மழை கனமழையாக வெளுத்து வாங்கியது. ஆட்டத்தின் இறுதி நேரம் வரை மழை ஓயாமல் இருந்தது.இதனால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தனர்.
இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றும் மழை பெய்வதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் ரிசர்வ் டே போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?
இன்றைய ஆட்டமும் கைவிடப்பட்டால், இந்தியாவும் பாகிஸ்தானும் தலா ஒரு புள்ளியைப் பெறும். இதன்மூலம், வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற பாகிஸ்தான் மூன்று புள்ளிகளுடன் சூப்பர் ஃபோர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும். இலங்கை ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு புள்ளிகள் பெற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த நிலையில், இலங்கை (செப்டம்பர் 12) மற்றும் வங்கதேசம் (செப்டம்பர் 15) ஆகிய இரு அணிகளுக்கு எதிரான இந்தியாவின் அடுத்த இரண்டு போட்டிகள் இந்தியாவுக்கு கட்டாயம் வென்று மொத்தம் 5 புள்ளிகளை எட்ட வேண்டும்.
இந்த ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வி பெறக்கூடாது. அல்லது இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்படக்கூடாது. அப்படி நடந்ததால் இந்தியா வெறும் மூன்று புள்ளிகள் தான் பெறும். இது இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகளை குறைக்கும். இந்தியா மூன்று புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமானால், மற்ற அணிகளின் முடிவுகள், மழை மற்றும் நெட் ரன்ரேட் காரணத்தல் பின்தங்கி இருக்க வேண்டும். இப்படி நிகழ்ந்தால் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டியும் இதே கொழும்பு பிரேமதாச மைதானத்தில் தான் நடக்கிறது. இந்த போட்டியின் போதும் மழை குறுக்கிடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.