ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதனிடையே போட்டியின் 2-வது நாளான இன்று ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே ராணுவம் தொடர்பான பிரச்சினை இருப்பதால் தனிப்பட்ட முறையில் இரு அணிகளும் மோதும் தொடர் பல வருடங்களாக நடைபெறாமல் இருப்பதால் ஐசிசி தொடரில் மட்டுமே இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த இரு அணிகளும் சாதாரணமாக மோதினாலெ உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
தற்போது ஐசிசி தொடரில் மோதவுள்ளதால் இரட்டிப்பு எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இதனிடையே ஆசியகோப்பை 2022 தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் 200 முறை சந்தித்துள்ளன.
இதில் பாகிஸ்தான் 87 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது, இந்தியா 71 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 38 போட்டிகள் சமநிலையில் முடிந்தது. மேலும் கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் மோதியது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் பாக்கிஸ்தான் நல்ல நிலையில் விளையாடியுள்ளது. அங்கு விளையாடிய 29 போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகள் சேர்த்து) 20 போட்டிகளில் பாகிஸ்தான்அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 24 போட்டிகள் ஷார்ஜாவிலும், இரண்டு அபுதாபியிலும், 3 துபாயிலும் நடந்தன.
போட்டியின் நேரடி ஒளிபரப்பு :
இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2022 போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயன்பாட்டில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணி வீரர்களின் விபரம்
இந்தியா:
ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
பாகிஸ்தான்:
பாபர் ஆசாம் (கே), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், முகமது ஹஸ்னைன், ஹசன் ஏ ஹலீன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“