ஜூனியர் உலககோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, பார்வையாளர்களுக்கு செம விருந்தாக அமைந்தது.
ஜூனியர் ( 19 வயதிற்குட்பட்டோருக்கான) உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் 30வது ஓவரை இந்திய வீரர் பிஸ்னோய் வீசீனார். பாகிஸ்தான் கேப்டன் ரோஹைய்ல் நசீர் மற்றும் காசிம் அக்ரம் களத்தில் இருந்தனர்.
ஓவரின் இரண்டாவது பந்தை காசிம் எதிர்கொண்டார். காசிம் பந்தை கவர் பகுதியில் அடித்தபோது கேப்டன் ரோஹைய்ல் ஓட துவங்கியதால், காசிமும் எதிர்முனையை நோக்கி ஓடினார். அதற்குள் இந்திய வீரர் அதர்வா அங்கோல்கரின் கையில் பால் சிக்க, பாகிஸ்தான் கேப்டன் ரோஹைய்ல், சுதாரித்துக்கொண்டு பின்வாங்கினார். அதை சற்றும் எதிர்பார்க்காத காசிம் ஒன்றும் செய்வதறியாது தவித்து ஆக மொத்தம் இருவரும் ஒரே கிரீசிற்கு வந்ததால், ரன் அவுட் ஆனது.
இந்திய கீப்பர் துருவ் ஜரேல், பந்தை ஸ்டெம்பில் அடித்தபோது பாகிஸ்தான் கேப்டன் ரோஹைய்ல், கீரிசில் தான் இருந்தார். இதனையடுத்து காசிம் அவுட் என அறிவிக்கப்பட்டது.
இந்திய இளம் வீரர்களின் அபாரமான பந்துவீச்சு, பீல்டிங்கால் பாகிஸ்தான் ஜூனியர் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
கார்த்திக் தியாகி, ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய ஜூனியர் அணி விக்கெட் இழப்பின்றி 173 ரன்கள் எடுத்து , 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜூனியர் உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.