India vs Pakistan - Asia Cup 2022 Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 ஃபார்மெட்டில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக வலம் வரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 2வது லீக் ஆட்டம் வருகிற 28 ஆம் தேதி தூபாயில் அரங்கேறுகிறது. இருநாடுகளின் அரசியல் காரணங்களால் இரண்டு அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகின்றன. இதனால், இப்போட்டி இருநாட்டு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான்: எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும்?
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அதன்படி, இரு அணிகளின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் மற்றும் எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
விராட் கோலி vs உஸ்மான் காதர்
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்து 2 ஆண்டுகளை கடந்துள்ளது. பணிச்சுமை காரணமாக கேப்டன்சியைத் துறந்த அவர் தற்போது தனது பேட்டிங்கில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். எனினும், சமீபத்திய தொடர்களிலும், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
இதனால், இந்திய அணியில் அவர் விளையாடுவது குறித்து அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், இதை ஒரு பொருட்டாக எடுக்காத இந்திய அணி நிர்வாகம் அவருக்கான பணிச்சுமையை குறைக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு கொடுத்தது. தற்போது, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணைந்துள்ள அவர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் களமாடும் போட்டி அவரின் 100வது டி20 ஆட்டமாகும். எனவே, அவர் அபாரமான ஸ்கோரைப் பெற தனது மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகிறார். கோலியைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் அவர் இருந்து வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை, 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன, அதில் இந்தியா 6-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டி டையில் முடிந்தது. அதில் இந்தியா பவுல்-அவுட் மூலம் வென்றது.
கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 3 அரை சதங்களுடன், 77.75 என்கிற வியக்கத்தக்க சராசரியையும், 118.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டையும், 78* என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 311 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக சதமடிக்க திணறி வரும் கோலி டி-20 போட்டிகளில் ஒரு சதம் கூட அடித்தது இல்லை. அதைப் பதிவு செய்யவும், அவரது ஃபார்மை மீட்டெடுப்பதற்கும் இது சரியான தருணம் என்றே கூறலாம். ஆனால் அந்த மைல்கல்லை எட்டவிடாமல் கோலியை தடுத்து நிறுத்தும் வீரராக பாகிஸ்தானின் ஜாம்பவான் வீரர் அப்துல் காதர் மகன் உஸ்மான் காதர் உள்ளார்.
பொதுவாக, கோலி அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பார். ஆனால், ஒரு பேட்ஸ்மேன் நல்ல ஃபார்மில் இல்லாமல் இருக்கும்போது லெக் ஸ்பின்னர்கள் எப்போதுமே தந்திரமாக செயல்பட காத்திருப்பார்கள். அதோடு, பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்து இருப்பார்கள்.
29 வயதான உஸ்மான், தனது மறைந்த தந்தையைப் போன்ற அதே சுழல் பந்துவீச்சை கொண்டுள்ளார். ஆனால், அவர் இந்தியாவுக்கு எதிராக இதுவரை எந்த டி20 ஆட்டத்திலும் விளையாடவில்லை. எனவே, களமாடும் முதல் ஆட்டத்திலே கவனம் ஈர்க்கவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் கண்டிப்பாக விரும்புவார். 2020ல் ராவல்பிண்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது டி20 ஐ அறிமுகத்தை ஏற்படுத்திய அவர் ஒட்டுமொத்தமாக, 18 டி20 போட்டிகளில் இருந்து 4/13 என்ற சிறந்த ஆட்டத்துடன் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கோலி முந்தைய காலத்தில் வலது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போராடினார் என்பது இரகசியமல்ல. அவர் கிரீஸுக்கு வந்தவுடனே எதிரணிகள் தங்களின் லெக் ஸ்பின்னரை பந்துவீச அனுபக்கின்றனர். 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய லெக்-ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, டி-20 போட்டிகளில் கோலியை கொஞ்சம் அதிகமாகவே தொந்தரவு செய்தவர். "விராட் தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் லெக்-ஸ்பின்னர்களை வரிசைப்படுத்த கடினமாக இருப்பதை நாங்கள் அடிப்படையில் கண்டறிந்தோம்." என்று அவர் கூறியிருக்கிறார்.
அப்படி கோலி, ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் டி-20 கிரிக்கெட்டில் லெக்-ஸ்பின்னர்களின் சுழல் வலையை கணிப்பது கடினம் என்றாலும், அவர் ஆரம்ப தாக்குதலில் இருந்து தப்பித்தால், அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும். உண்மையில், அவரின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்கள் மற்றும் சராசரிகள் லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக வந்ததாகும். எனவே, கோலிக்கு எதிராக உஸ்மானின் மாயாஜாலம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரோகித் சர்மா vs நசீம் ஷா
இந்தியா ஆசியக் கோப்பையின் ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்டுகளில் நடப்புச் சாம்பியனாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆசியக் கோப்பையிலும் அதிகமாக பட்டங்களை (7 முறை) வென்ற அணியாகவும் வலம் வருகிறது. கடந்த ஆசிய கோப்பை பதிப்பு 2018ல் ஒருநாள் ஆட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறியது. அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தி இருந்தார். மேலும் அணியை சாம்பியன் பட்டம் வெல்லவும் அழைத்துச் சென்றார். எனவே, அதே முனைப்புடன் இந்திய அணியை மீண்டும் வழிநடத்த கேப்டன் ரோகித் தயாராகி வருகிறார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்த திட்டங்களை வகுத்தும் வருகிறார்.
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக மகத்தான பேட்டிங்கில் ரோகித் ஏற்கனவே 4 சதங்களை அடித்துள்ளார். இது இந்த ஃபார்மெட்டில் ஒரு வீரரின் உச்சபட்ச சாதனையாகவும் இருந்து வருகிறது. மேட்ச் வின்னராக வலம் வரும் அவர், அணியில் தொடக்க வீரராக களமாடுவதால், அவரால் அதிக ரன்களை குவிக்க முடியும். மேலும், அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தையும் அவரால் வழங்க முடியும். ஆனால், ரோகித் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடி 70 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 30* ரன்கள் ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் முதலில் சந்திக்கும் வேகப்பந்து வீச்சாளராக நசீம் ஷா இருப்பார். தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் சற்று மெதுவாக தொடங்கும் அவர் நசீமை எதிர்கொள்ளும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன்னென்றால், அவர் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் பேக்ஃபூட்டில் ஆட சென்று சிக்கிக் கொள்ளலாம். அதை நசீம் நன்றாக அறிந்திருப்பார். ரோகித் முதலில் கிரீஸுக்கு வரும்போது அவரது கால்கள் நன்றாக நகர்வதில்லை. மேலும் தனது வேகத்தால் ஆடுகளத்தை சீர்குலைக்கக்கூடிய நசீம், ரோகித்தை ஆரம்பத்திலேயே பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்படலாம்.
19 வயதான நசீம் 13 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அவர் இன்னும் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது சிறப்பான வாய்ப்புக்காக எதிர்நோக்கி இருக்கிறார். மேலும், தனது புயல் வேகத்தால் இந்திய வீரர்களை கலங்கடிக்கவும் துடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தொடக்க ஆட்டத்தில் நசீம் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால், ஒரு நவீன கால பேட்டிங் லெஜண்ட்க்கும் ஒரு டிரவே ரூக்கிக்கும் இடையே நடக்கும் போட்டி சுவரசியமாக இருக்கும்.
சூர்யகுமார் யாதவ் vs ஹரிஸ் ரவுஃப்
இந்திய கிரிக்கெட் அணியில் அசாத்திய வீரராக வலம் வருபவர் சூர்யகுமார். சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாக அடியெடுத்து வைத்திருந்தாலும், சமீபத்திய ஆட்டங்களில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நம்பமுடியாத 360 டிகிரி ஷாட் அடிக்கும் திறமைக்காக அறியப்பட்ட அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தோல்வியடைந்த இந்திய பேட்டிங் வரிசையின் ஒரு பகுதியாக இருந்தார். அந்த போட்டியில் அவர் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தற்போது சூர்யகுமார், ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் கிட்டத்தட்ட 176 ஸ்டிரைக் ரேட்டைக் கொண்ட டி20 போட்டிகளில் தன்னை ஒரு வலிமையான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். எனவே, இந்த முறை பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை ஒரு கை பார்க்கமால் களத்தில் இருந்து வெளியேற மாட்டார் என்று நம்பலாம்.
பல பேட்டர்களில் இருந்து சூர்யகுமாரை வேறுபடுத்திக் காட்டுவது, வேகம் மற்றும் ஸ்பின் இரண்டையும் நன்றாகச் சமாளிக்கும் திறன் தான். சில காலத்திற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டி20-யில் சதத்தை அவர் எடுத்தபோது, அவர் தனக்கென இடமளிக்க லெக் ஸ்டம்புக்கு வெளியே கலக்கிக்கொண்டே இருந்தார். பந்து வீச்சாளர் அவரைப் பின்தொடர்ந்தபோது, அவர் சிரமமின்றி லெக்-சைடு நோக்கியோ அல்லது இன்சைட் அவுட் ஷாட்களை ஆஃப்-சைடு நோக்கியோ விளையாடி அசத்தினார்.
உண்மையில் அவர் ஆஃப்-சைட் ஷாட்கள் இல்லாத ஒரு பேட்டராக இருந்ததில் இருந்து தற்போது வெகுதூரம் வந்துவிட்டார். ஆனால் அது இப்போது கடந்த காலத்தின் ஒரு விஷயம். அதனால் அவர் தொடர்ந்து ஏபி டி வில்லியர்ஸுடன் மிஸ்டர் 360 டிகிரி என்று ஒப்பிடப்படுகிறார். அவர் ஏற்படுத்தக்கூடிய சேதத்தை பாகிஸ்தானியர்கள் குறைக்க வேண்டுமானால், அவரை முன்கூட்டியே அவுட் செய்தாக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கக் கூடும்.
எனவே, அவர்கள் 140 கிமீ வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட ஹாரிஸ் ரவுஃப் அவருக்கு எதிராக பந்துவீச அழைப்பார்கள். ரவுஃப் மணிக்கு 150 கிமீ வேகத்தையும் தொடுக்கூடியவர். அவர் சரியான ரித்தில் பந்துவீசும் போது அவரை சமாளிப்பது சற்று கடினமானதாக இருக்கும். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில், ஹர்திக் பாண்டியாவை 11 ரன்களில் ரவுஃப் வெளியேற்றி இருந்தார். இது இந்தியாவுக்கு பெரிய அடியாக இருந்தது. அந்த ஆட்டத்தில் சூர்யகுமாரைப் பற்றி நினைவில் அவர்கள் வைத்திருப்பது என்னவென்றால், அவர் ஹசன் அலியிடம் வீழ்ந்தார் எனபதைத் தான்.
ரவுஃப் தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் சூர்யகுமாரை அடிக்க தூண்டும் பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கலாம். அவர் விளையாட முடியாத பவுன்சர்களை வீசும் திறன் கொண்டவர். அது சூர்யகுமாருக்கு எதிராக அவர் கட்டவிழ்த்துவிடக்கூடிய ஒரு ஆயுதமாகும். ரவுஃப் இதுவரை விளையாடிய 35 டி20 போட்டிகளில், 4/22 என்ற சிறந்த புள்ளிகளுடன் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் நிச்சயமாக சூர்யகுமாருடன் போட்டியிடும் ஒரு சிறந்த மேட்ச்-அப்பாக பார்க்கப்படுகிறார்.
புவனேஷ்வர் குமார் vs பாபர் அசாம்
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், புவனேஷ்வர் குமாருக்கு முன்னதாகவே ஸ்டிரைக் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், அவரது ஸ்விங் பந்துவீச்சு வலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிக்குவார்கள். வலது கை பேட்டர்களுக்குள் பந்தை மீண்டும் கொண்டு வரும் அவரது திறமையால், புவனேஷ்வர், தற்போது உலகின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக இருக்கும் அவர்களின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் டாப் ஆர்டருக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருப்பார்.
புவனேஷ்வர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 4 டி20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை 3/9 என சிறப்பாக வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக, புவனேஷ்வர் 72 டி20 போட்டிகளில் இரண்டு நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஒரு ஐந்து விக்கெட்டுகளுடன் 73 ஸ்கால்ப்களை பெற்றுள்ளார்.
சுவாரஸ்யமாக, பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு டி-20யில் மட்டுமே விளையாடி இருக்கிறார். கடந்த ஆண்டு அந்த டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதை எந்த இந்திய ரசிகரும் நினைவில் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக, பாபர் 74 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 26 அரை சதங்கள் அடித்து, 686 ரன்கள் எடுத்துள்ளார்.
நல்ல ரிதத்தில் அவர் இருக்கும்போது, கிட்டத்தட்ட தடுக்க முடியாதவராக இருந்தாலும், பாபர் கடந்த காலங்களில் ட்ரெண்ட் போல்ட் போன்ற ஒரு பந்து வீச்சாளரால் தொந்தரவு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் பந்தை காற்றில் நகர்த்தும் திறன் கொண்டவர். பாகிஸ்தான் அணியில் சிறந்த பேட்டராகவும், அவர்களின் அணியின் தலைவராகவும் அவர் பந்துவீசும்போது, புவி நிச்சயமாக அந்த அறிவை அவரது மனதில் வைத்திருப்பார். சில சிறந்த கிரிக்கெட்டை உருவாக்க உறுதியளிக்கும் இந்த முக்கிய வீரர்களுக்கு இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ரவீந்திர ஜடேஜா vs முகமது ரிஸ்வான்
பாகிஸ்தான் கடைசியாக விளையாடிய டி20 உலகக் கோப்பை போட்டியில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது தரமான பேட்டிங் இந்திய அணியை சோர்வடைய செய்தது. டீம் இந்தியா, அந்த வேதனையான இழப்பிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கும்.
ரிஸ்வான் போன்ற ஒருவரை நிலைகுலையச் செய்ய புதிய பந்தில் ரவீந்திர ஜடேஜாவை ரோகித் ஷர்மா ஆரம்பத்திலேயே களமிறக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜடேஜா காற்றில் வேகமாக பந்து வீசும் திறன் கொண்டவர். தொடர்ந்து ஒரே லைன் மற்றும் லென்த் அடித்து, பின்னர் திடீரென மாறுபாடுகளை வீசுகிறார்.
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் தொடரில், ரிஸ்வானை தொந்தரவு செய்த ஒரு பந்து வீச்சாளர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஆவார். ஜெயசூர்யாவைப் போலவே, ஜடேஜாவும் நேராக செல்லும் பந்து வீச்சு, ஆர்ம்-பால், மிகவும் பயனுள்ள மாறுபாடாக பயன்படுத்துகிறார். குறிப்பாக டர்னிங் டிராக்குகளில் அவர் சுழலில் வித்தை காட்டுபவராக இருக்கிறார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் தொடரின் நாயகன் ஜெயசூர்யா, உண்மையில் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஸ்வானின் விக்கெட்டை சதி செய்து வீழ்த்தினார். இலங்கை 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. ஸ்டம்புகளுக்கு அருகில் இருந்து வீசப்பட்ட பந்து, திரும்பும் என்று ரிஸ்வான் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக பந்து அவருக்கு பின்புறம் இருந்த ஸ்டம்பை பதம் பார்த்தது.
இந்த பாடம், பாகிஸ்தானின் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான பேட்டர்களில் ஒருவராக வேகமாக மாறிய ரிஸ்வானுக்கு எதிராக ஒரு பந்துவீச்சு திட்டத்தை வரைவதற்கு இந்திய அணி நிச்சயமாக முயற்சித்திருக்கும்.
ஆடம் கில்கிறிஸ்ட்டை தனது முன்மாதிரியாக கொண்டு விளையாடி வரும் ரிஸ்வான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அவர் தனது பேட்டிங்கின் தாக்குதலால் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் போட்டியை தலைகீழாக மாற்ற முடியும். இது அவர் 55 பந்துகளில் 79* ரன்கள் எடுத்தபோது தெளிவாகத் தெரிந்தது. இந்தியாவுக்கு எதிரான அந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என அடித்து மிரட்டி இருந்தார். ஒட்டுமொத்தமாக, ரிஸ்வான் 56 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 13 அரை சதங்களுடன் 50.36 சராசரி மற்றும் 128.83 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
இதற்கிடையில், ஜடேஜா பாகிஸ்தானுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை 2/11 என சிறப்பாக வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்திய ஆல்-ரவுண்டர் ஜடேஜா 62 டி20 போட்டிகளில் இருந்து 3/15 என்ற சிறந்த ஆட்டத்துடன் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆதலால் அவருக்கும் ரிஸ்வானுக்கும் இடையில் அரங்கேறும் போர் சுவாரசியமாக இருக்கும்.
இந்திய பந்துவீச்சாளர்கள் துரிதமாக செயல்பட்டு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்றவர்களை முன்கூட்டியே பெவிலியனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் இன்னும் அனுபவமற்ற வீரர்களின் வரிசையைக் கொண்டுள்ளது. அவர்கள் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் பட்சத்தில் வெற்றி இந்திய அணிக்கு தான்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.