இந்தியா vs பாகிஸ்தான் மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 ஸ்கோர் அப்டேட்ஸ்: ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் பி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
வறண்ட மைதானத்தைப் பார்த்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் தெரிவித்தார். டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருப்பேன் என்று ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது விரலில் காயம் ஏற்பட்டு தொடக்க ஆட்டத்தில் இருந்து வெளியேறிய ஸ்மிருதி மந்தனாவுக்கு பதிலாக ஹர்லீன் தியோலை இந்தியா கொண்டு வந்தது.
கடைசியாக இரு அணிகளும் மோதிய 2022 ஆசியக் கோப்பையில், இந்தியா அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது, இந்த முறை இந்திய அணி அந்த தோல்விக்கு பழிவாங்கவும், ஐ.சி.சி கோப்பையை நோக்கிய முதல் நேர்மறையான படியை எடுக்கவும் தயாராக உள்ளது.
பாகிஸ்தானுக்குப் பிறகு, பிப்ரவரி 15, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முறையே மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துடன் இந்தியா விளையாடுகிறது.
இரு அணிகளும் விளையாடும் 11 வீராங்கனைகளின் விவரம்
இந்தியா
ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
பாகிஸ்தான்
ஜவேரியா கான், முனீபா அலி(விக்கெட் கீப்பர்), பிஸ்மா மரூப்(கேப்டன்), நிதா தார், சித்ரா அமீன், அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், பாத்திமா சனா, ஐமன் அன்வர், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்
பாகிஸ்தான் பேட்டிங்
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மூனிபா அலி மற்றும் ஜவேரியா கான் களமிறங்கினர். 2வது ஓவரிலே ஜவேரியா கான் 8 ரன்களில் அவுட் ஆனார். அவர் தீப்தி சர்மா பந்தில் ஹர்மன்பிரீத்திடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக கேப்டன் பிஸ்மா மரூப் களமிறங்கினார். தொடக்கம் சிறப்பாக ஆடிய பிஸ்மா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து, அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். மறுமுனையில் ஆடிவந்த மூனிபா 12 ரன்களில் ஸ்டெம்பிங் முறையில் வெளியேறினார். அவர் ராதா யாதவ் பந்தில் அவுட் ஆனார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நிதா தார் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் பூஜா பந்தில் ரிச்சாவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கி சிறிது நேரம் தாக்குப் பிடித்த சித்ரா அமீன் 11 ரன்களில் அவுட் ஆனார். இவர் ராதா யாதவ் பந்தில் ரிச்சாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக ஆயிஷா களமிறங்கினார். பிஸ்மா மற்றும் ஆயிஷா இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பிஸ்மா அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஆயிஷா அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினார்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் பிஸ்மா 68 ரன்கள் அடித்தார். அவர் 7 பவுண்டரிகளை விளாசினார். ஆயிஷா 25 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷ்டிகா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய யஷ்டிகா 17 ரன்களில் அவுட் ஆனார். அவர் சாடியா இக்பால் பந்தில் பாத்திமாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடி வந்த ஷபாலி 33 ரன்களில் அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவர் நஸ்ரா சந்து பந்தில் அமீனிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக தொடங்கினார். இருப்பினும் 16 ரன்களில் அவுட் ஆனார். அவர் நஸ்ரா பந்தில் பிஸ்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 13.3 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக ரிச்சா களமிறங்கி, அடித்து ஆடினார். இதனால் அணியின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது. 19வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ரோட்ரிக்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அது அவரது அரைசதத்திற்கும் உதவியது.
ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 53 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் ரிச்சா 20 பந்தில் 31 ரன்கள் விளாசியிருந்தார். இதன்மூலம் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் உலகக் கோப்பையில் 150 ரன்களை சேஸ் செய்த வரலாறையும் படைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.