Javed Miandad on Pakistan cricket - BCCI Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதற்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் (ஐ.சி.சி) பகிர்ந்து கொண்டது. இதன்படி, கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை
இதற்கிடையில், 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டிகள் நடந்தால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என பிசிசிஐ தெரிவித்திருந்தது. தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் சம்மதித்திருக்கிறது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் இதை ஏற்றுக் கொண்டது.
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அகமதாபாத்தில் நடக்கும் என்ற செய்திகள் வெளியாகியது. இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எங்களால் குஜராத்தில் விளையாட முடியாது. தென்னிந்தியாவில் விளையாடவே நாங்கள் விரும்புகிறோம் என்றும் சொல்லப்பட்டது.
முன்னாள் பாக்., கேப்டன் கடும் தாக்கு
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட், பி.சி.சி.ஐ இந்திய அணியை முதலில் தனது நாட்டிற்கு அனுப்ப ஒப்புக் கொள்ளும் வரை, இந்த ஆண்டு நடக்கும் ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளுக்கு பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் 2012ல் இந்தியாவுக்கு வந்துள்ளது. 2016ல் கூட வந்திருந்தது. இப்போது இந்திய அணி இங்கு வர வேண்டியது முறையானது. நான் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால், உலகக் கோப்பையில் கூட எந்த போட்டியிலும் விளையாட இந்தியா செல்ல மாட்டேன். அவர்களுடன் (இந்தியா) விளையாட நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் ஒருபோதும் அதே முறையில் பதிலளிக்க மாட்டார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் பெரியது. நாங்கள் இன்னும் தரமான வீரர்களை உருவாக்கி வருகிறோம். எனவே நாம் இந்தியாவுக்குச் செல்லாவிட்டாலும் அது நமக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.
ஒருவரால் அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்வது நல்லது என்று நான் எப்போதும் கூறுவேன். கிரிக்கெட் என்பது மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு விளையாட்டு என்றும், நாடுகளுக்கு இடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் குறைகளை நீக்கக்கூடியது என்றும் நான் எப்போதும் கூறி வருகிறேன்.
ஆசியா கோப்பைக்காக அவர்கள் மீண்டும் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே நாங்கள் இப்போது வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது." என்றும் ஜாவேத் மியான்டட் கூறியுள்ளார்.
இந்தியா கடைசியாக 2008 ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. அன்றிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதட்டங்கள் காரணமாக இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil