scorecardresearch

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: கோட்டையை தகர்த்து வரலாறு படைத்த இந்தியா!

Ind vs SA Boxing Day TEST Tamil News: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் (பாக்சிங் டே) போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Ind vs SA TEST

India vs South Africa 1st Test Live Score and Updates: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. கிறிஸ்துமஸ் நாளுக்கு அடுத்த நாள் நடக்கும் போட்டிகளை பாக்சிங் டே டெஸ்ட் என்பார்கள். அந்த வகையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையில் இன்று தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்திய அணி விவரம்: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த்(வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

தென்னாப்பிரிக்கா அணி விவரம்: டீன் எல்கர் (கே), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, குயின்டன் டி காக் (வி.கீ), வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

இந்நிலையில்,செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26ம் தேதி நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்டில் டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல்நாள் ஆட்டம்: இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவிப்பு

இதன்படி, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களம் இறங்கினர். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த, புஜாரா முதல் பந்திலேயே கீகன் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி எங்கிடி பந்துவீச்சில் அவுட் ஆனார்.

சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் சதமடித்து அசத்தினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல் ராகுல் 122 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து

இதையடுத்து, இன்று (டிசம்பர் 28) இரண்டாம் நாள் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மூன்றாம் நாள் ஆட்டம் நாளை அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 327 ரன்களுக்கு ஆல் அவுட்

3 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ராகுல் 123 ரன்களில் அவுட் ஆனார். ரபாடா பந்தில் டி காக்-கிடம் கேட்ச் கொடுத்து ராகுல் அவுட் ஆனார். அடுத்ததாக, அரைசதத்தை நெருங்கிய நிலையில் ரஹானே அவுட் ஆனார். ரஹானே, 102 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, நிகிடி பந்தில் டி காக்-கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரிஷ்ப் பண்ட் 8 ரன்களிலும், அஸ்வின் 4 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கியவர்களில் பும்ரா மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டார். அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தாக்கூர் 4, ஷமி 8, சிராஜ் 4 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க தரப்பில், நிகிடி 6 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். ரபாடா 3 விக்கெட்களும் ஜென்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா 197 ரன்களுக்கு ஆல் அவுட்

அடுத்ததாக முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் எல்கர் 1 ரன்களில் வெளியேற, அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. சற்று நிதானமாக ஆடிய மார்க்ரம் மற்றும் பீட்டர்சன் இருவரையும் ஷமி போல்டாக்கி வெளியேற்றினார். மார்க்ரம் 13, பீட்டர் 15 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களம் இறங்கிய வாண்டர் சன் 3 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த பவுமா மற்றும் டி காக் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பின்னர், டி காக் 33 ரன்களில் தாக்கூர் பந்தில் போல்டானார். அடுத்து இறங்கிய முல்டர் 12 ரன்களில் வெளியேற, அரை சதம் அடித்த பவுமா 52 ரன்களில் அவுட் ஆனார். பவுமா, ஷமி பந்தில் பண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தாக ஜென்சன் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய ரபாடா 25 ரன்களில் வெளியேறினார். பின்னர் மகராஜ் 12 ரன்களிலும் நிகிடி ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆக தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 2-ம் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அன்றைய ஆட்டம் முடியும் தருவாயில் இருந்ததால் அடுத்த பேட்ஸ்மனாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டார். இந்திய அணி 16 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில், சிறிது நேரத்திலேயே ஷர்துல் வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் அவுட் ஆனார். பின்னர் கடந்த இன்னிங்ஸில் சதமடித்த ராகுல் 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்தபடியாக, கோலி 18 ரன்களிலும், புஜாரா 16 ரன்களிலும் அவுட் ஆகினார்.

பின்னர் ரஹானே-பண்ட் ஜோடி சற்று நிலைத்து ஆடியது. ரஹானே 20 ரன்களில் வெளியேற, அஸ்வினுடன் ஜோடி சேர்ந்தார் பண்ட். அஸ்வின் 14 ரன்களிலும், பண்ட் 34 ரன்களிலும் அவுட் ஆகினார். பின்னர் களமிறங்கிய ஷமி 1 ரன்னிலும், சிராஜ் டக் அவுட்டும் ஆக இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பும்ரா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டார்க்கெட் 305

இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா மற்றும் ஜென்சன் தலா 4 விக்கெட்கள் வீழ்த்த, நிகிடி 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. நேற்று 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது.

5ம் நாள் ஆட்டம் – இந்தியா அபார வெற்றி

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் பகல் 1.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற மேலும் 211 ரன்கள் தேவைபட்டது. நிதான ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் மறுமுனையில் இருந்த பவுமா இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் கொடுத்தார்.

இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டீன் எல்கர் 77 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிறிது நேரம் தாக்குப்பிடிக்க டி காக் 21 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய முல்டர் 1 ரன்களில் நடையை கட்ட தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்களை இழந்தது. எனவே, உணவு இடைவேளை போது அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பவுமா 34 ரன்களுடனும் யான்சென் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகான ஆட்டத்தில், வேகப்பந்துவீச்சாளர் முகமது சமியின் பந்துவீச்சில் யான்சென் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரபாடா, இங்கிடி அஸ்வினின் சுழலில் சிக்கி வெளியேறவே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

எனவே, இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கோட்டையை தகர்த்து வரலாறு படைத்த இந்தியா

செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வரலாற்று தருணமாக பார்க்கப்படுகிறது.

கேப்டன் கோலி சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே (முதலாவது டெஸ்ட்) போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs south africa 1st test live score and updates

Best of Express