இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. மழை காரணமாக இருதரப்புக்கும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
இந்தநிலையில் அக்டோபர் 9 ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கேசவ் மகாராஜ் அணியை வழிநடத்தினார். இந்தியா தரப்பில் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமான நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கினார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரு அணி வீரர்கள் விவரம்
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ் (கேப்டன்), ஜான்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ககிசோ ரபாடா, வெய்ன் பார்னெல், ஜார்ன் ஃபோர்டுயின், அன்ரிச் நார்ட்ஜே
தென்னாப்பிரிக்கா பேட்டிங்
தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் மாலன் களமிறங்கினர். டி காக் 5 ரன்கள் மட்டுமே அடித்து சிராஜ் பந்தில் போல்டானார். அடுத்து வந்த ஹெண்ட்ரிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஆடி வந்த மாலன் 25 ரன்களில், எல்.பி.டபுள்யூ முறையில் ஷாபாஸ் அகமது பந்தில் வெளியேறினார். அடுத்து ஹெண்ட்ரிக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் விக்கெட்டை கொடுக்காமல் ரன் சேர்த்து வந்தனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணியினர் திணறினர். இருவரும் 129 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய நிலையில், ஹெண்ட்ரிக்ஸ் 74 ரன்களில் வீழ்ந்தார். அவர் சிராஜ் பந்தில் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கிளாசன் அதிரடியாக ஆடி 30 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம் 79 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய மில்லர் சிறப்பாக சேர்த்து வர மறுமுனையில் ஆடிய பார்னல் 16 ரன்களிலும், மகராஜ் 5 ரன்களிலும் அவுட் ஆனார். அடுத்ததாக ஃபோர்டுயின் களமிறங்கிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்களையும், சுந்தர், அகமது, குல்தீப், தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில், தவான் 13 ரன்களில் பர்னெல் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கில் 28 ரன்களில் ரபாடா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனால் இந்திய அணி 48 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அடுத்ததாக உள்ளே வந்த ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனுடன் சேர்ந்து ரன்களை குவித்தார். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் இருவரது விக்கெட்களையும் வீழ்த்த முடியாமல் தென்னாப்பிரிக்க பவுலர்கள் திணறினர். இஷான் கிஷன் சிக்சர்களாக விளாச, மறுமுனையில் ஸ்ரேயாஸ் பவுண்டரிகளாக விளாசினார். அணியின் எண்ணிக்கை 209 ஆக இருந்தபோது, இஷான் கிஷன், ஃபோர்டுயின் பந்தில் ஹெண்ட்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் அடித்தார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிறப்பாக கம்பெனி கொடுக்க ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தார். இந்திய 45.5 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் 113 ரன்களிலும், சாம்சன் 30 ரன்களிலும் களத்தில் இருந்தனர். ஸ்ரேயாஸ் 15 பவுண்டரிகளை விளாசினார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் பார்னெல், ரபாடா, ஃபோர்டுயின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராஞ்சியில் இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்தப்போட்டியில் ராஞ்சியின் மைந்தன் MS தோனி மிடில் ஆர்டரில் பேட் செய்ய வெளியே வந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து களத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்.
T20 உலகக் கோப்பை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவுக்கு முக்கிய கவலையாக இருப்பது வீரர்களின் காயம். முக்கிய டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா விலகிய நிலையில், தற்போது ரிசர்வ் பட்டியலில் உள்ள தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது கவலையை அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.