India Vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்கிற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர் சிராஜ் பந்துவீச்சில் சிக்கி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ஜோடி அமைத்த டோனி டி ஸோர்ஸி - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடியில், டோனி 2 ரன்னுக்கும், டிரிஸ்டன் 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த கைல் வெர்ரேய்ன் - டேவிட் பெடிங்காம் ஜோடியை தனது மிரட்டல் பந்துவீச்சால் சிராஜ் உடைத்தார். இந்த ஜோடியில் டேவிட் 12 ரன்னில் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதன்பிறகு வந்த மார்கோ ஜான்சனின் விக்கெட்டையும் சிராஜ் கைப்பற்றினார். ஏற்கனவே 3 விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், மார்கோ ஜான்சனின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். களத்தில் இருந்த கைல் வெர்ரேய்ன் சிராஜ் பந்தில் 15 ரன்னுக்கு அவுட் ஆனார். 13 ஓவருக்குள் டாப் ஆடரை பறிகொடுத்து 29 ரன் மட்டும் எடுத்து ரன் சேர்க்க தடுமாறி வந்த தென் ஆப்ரிக்கா மிடில் -ஆடரும் சுத்தமாக காலி செய்யப்பட்டதால் ரன் சேர்க்க முடியாமல் தத்தளித்தது.
லோ-ஆடரில் வந்த வீரர்களின் விக்கெட்டை முகேஷ் குமாரும், பும்ராவும் மாறி மாறி வீழ்த்த தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அந்த அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் டக் -அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் ரோகித் அதிரடியாக விளையாட, சுப்மன் கில் அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிவந்த ரோகித் 39 ரன்களில் அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். பர்கர் பந்தில் ஜென்சனிடம் கேட்ச் கொடுத்து ரோகித் அவுட் ஆனார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். கில் – கோலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது பவுண்டரிகளை விளாசியது. இதனால் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது.
கில் 36 ரன்களில் அவுட் ஆனார். அவர் பர்கர் பந்தில் ஜென்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் களமிறங்கினார். இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் 2 ஆவது பந்திலே டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ராகுல் ஒரு முனையில் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் ஆடிய கோலி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். இந்திய அணி 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் 8 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜடேஜா 2 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆனார். அவர் எங்கிடி பந்தில் ஜென்சனிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த பும்ராவும் 2 ஆவது பந்திலே டக் அவுட் ஆனார். அவர் எங்கிடி பந்தில் ஜென்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் ஆடி வந்த கோலி மேற்கொண்டு ரன் எதுவும் அடிக்காமல் 46 ரன்களில் அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். ரபாடா பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து கோலி அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சிராஜ் முதல் பந்திலே ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா 3 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார். அவர் ரபாடா பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். முகேஷ் குமார் ஒரு பந்தையும் சந்திக்காமல் அவுட் ஆகாமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்ஸ்
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி அதன் 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் மார்க்ரம் மற்றும் எல்கர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சற்று அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இருப்பினும் எல்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் முகேஷ் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டோனி 1 ரன்னில் முகேஷ் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ஸ்டப்ஸ் 1 ரன்னில் பும்ரா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து டேவிட் களமிறங்கியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. இத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
2ம் நாள் ஆட்டம்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அதன் பேட்டிங்கை தொடர்ந்துள்ளது. அந்த அணியின் டேவிட் பெடிங்ஹாம் - கைல் வெர்ரைன் ஜோடி களத்தில் விளையாடிய நிலையில், பெடிங்ஹாம் 11 ரன்னுக்கும், வெர்ரைன் 9 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு, தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் உடன் மார்கோ ஜான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் மார்கோ ஜான்சன் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனிடையே ஐடன் மார்க்ரம் 68 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் வந்த கேசவ் மகாராஜ் 3 ரன்னுக்கு அவுட் ஆனார்.
ஐடன் மார்க்ரம் - ககிசோ ரபாடா ஜோடியில் சதம் அடித்த ஐடன் மார்க்ரம் 103 பந்துகளில் 17 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால், தென் ஆப்ரிக்க அணியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 36.5 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்சைப் போலவே இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை பவுலிங்கில் அமர்களப்படுத்தியது. மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
79 ரன்கள் இலக்கு - இந்தியா பேட்டிங்
தற்போது 2வது இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி 79 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி இலக்கை அதிரடியாக துரத்தி வந்த நிலையில், 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த கில் 10 ரன்னில் ஆட்டமிழந்த வெளியேறினார். அடுத்து வந்த கோலி 12 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரியை விரட்டி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை சேர்த்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலன் இந்திய அணி தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்தது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score, 2nd Test Day 2
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs SA Live Score, 2nd Test Day 1
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.