India vs South Africa 2nd Test: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்கிற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
செஞ்சூரியனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மூன்று டெஸ்டில் ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவுடன், இந்தியா வெற்றிக்காக தீவிரம் காட்டும். முந்தைய 6 ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி 14 புள்ளிகளுடன் (38.89 PCT) ஒன்பது அணிகள் கொண்ட பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வி என்பது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது பந்துவீச்சு தாக்குதலை சீரமைக்க உள்ளது. அவர்கள் தங்கள் பந்துவீச்சு வரிசையில் இன்னும் ஒரு மாற்றத்தையாவது செய்ய வாய்ப்புள்ளது.
அணிக்கு திரும்பும் ஜடேஜா
முதுகுவலி காரணமாக தொடக்க டெஸ்டில் விளையாடாமல் இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தப் போட்டியில் ஆடும் லெவன் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செஞ்சூரியனில் நொறுங்கிய இந்தியாவின் பேட்டிங்கிலும், திறமையான பந்துவீச்சாளராகவும் ஜடேஜா ஆழம் சேர்ப்பார்.
பிரசித்-க்குப் பதில் முகேஷ்
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் செஞ்சூரியனில் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஆனால் அறிமுக வீரரான பிரசித் கிருஷ்ணாவின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர் செஞ்சுரியன் மேற்பரப்பில் இருந்து டிராம்போலைன் பவுனைப் பெற அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் தனது லெந்த்துடன் போராடினார். மறுபுறம் முகேஷ் தனது சர்வதேச வாழ்க்கையில் வேகமாக முன்னேறி வருகிறார். பந்தை இருபுறமும் நகர்த்தும் திறன் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அவரை பிரசித்தை விட ஆபத்தான பந்துவீச்சாளராக ஆக்குகின்றன.
அஸ்வின் அல்லது ஷர்துல்?
முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மாவால் அஸ்வின் அதிகம் பயன்படுத்தப்படவில்லை. கேஎல் ராகுல் நேரான கேட்சை கைவிட்ட பிறகு மூத்த சுழற்பந்து வீச்சாளரும் துரதிர்ஷ்டவசமாக இருந்தார். மறக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் மூத்த ஆஃப் ஸ்பின்னரை இந்தியா தக்கவைத்துக்கொள்வது விவேகமானதாக இருக்கும். ஷர்துல் 19 ஓவரில் 101 ரன்களை கசியவிட்டார்.
மீண்டும் அணிக்கு திரும்பும் லுங்கி என்கிடி
தென் ஆப்பிரிக்காவின் வெற்றியின் போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இரண்டாவது டெஸ்டில் விளையாடமாட்டார். தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை கருத்தில் கொண்டு, தென் ஆப்ரிக்கா ஆல்-பேஸ் அட்டாக் விளையாட ஆசைப்படும். அந்த சூழ்நிலையில், கணுக்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்பட்ட லுங்கி என்கிடி அணியில் சேர்க்கப்படலாம்.
வானிலை அறிக்கை
போட்டி நடக்கும் கேப் டவுனில் 33 முதல் 34 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும்.
நியூலேண்ட்ஸ் ஆடுகளம் எப்படி?
நியூலேண்ட்ஸ் மைதானத்தில் புல்வெளிகள் இருந்தாலும், ஆடுகளம் பேட்டிங் சொர்க்கமாக இருக்கும், இருபுறமும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறிய உதவி கிடைக்கும். போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, நந்த்ரே பர்கர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa 2nd Test tip-off XI
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.