தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில், டர்பனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து, க்கெபெர்ஹாவில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa LIVE Cricket Score, 4th T20I
இதன்பிறகு, செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா பேட்டிங் செய்ய களமிறங்கினர். இந்த ஓபனிங் ஜோடி அதிரடியாக அடித்து விளையாடியது.
இந்திய அணி 5.5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 18 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உடன் 36 ரன்கள் அடித்திருந்த அபிஷேக் சர்மா, லுதோ சிபம்லா வீசிய பந்தில் ஹென்ரிச் கிளாசென்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்து சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த பேட்டிங் ஜோடி, சிக்சர், ஃபோர் என ரன்களை அடிக்கத் தொடங்கிய கடைசிவரை அடித்துக்கொண்டே இருந்தார்கள். உண்மையில் ரன் மழை என்று சொல்வார்களே அதை நிகழ்த்திக் காட்டினார்கள். திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர்.
மார்கோ ஜான்சென், ஜெரால்டு கோட்ஸீ என தென் ஆப்பிரிக்காவின் எல்லா பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்த முடியாமல் சோர்ந்து போனார்கள்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 109 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன், தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரயான் ரிக்கெல்டன் மற்றும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சியாக இருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது பந்தில் ரீஸா ஹெண்ட்ரிஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். 2-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசீனார். அந்த ஓவரின் 5வது பந்தில் ரிக்கெல்டன் 1 ரன் மட்டுமே எடுத்து சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் ஏய்டன் மர்க்ரம் 8 ரன்கள் மட்டும் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் ரவி பிஷ்னோய் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஹெண்ட்ரிஸ் கிளாசென் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆனாலும், இந்த நீண்ட நேரம் நீடிக்கவில்லை. டேவிட் மில்லர் 36 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 43 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.