இந்தியா - தென்ஆப்பரிக்க அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டி தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்காத இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, பும்ரா ஆகியோர் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பாக்ஸிங் டே-வில் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்க இதுவரை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகள் இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தென்ஆப்பரிக்க அணி 17 போட்டிகளிலும், இந்திய அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. அதேபோல் 1992-ல் இருந்து இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் 8 டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இதில் 7 தொடர்களில் தோல்வியடைந்த இந்திய அணி 2011-ம் ஆண்டு தோனி தலைமையில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது.
அதேபோல் தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியும், 7 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது. அதனால் நாளை தொடங்க உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
செஞ்சூரியன் மைதானம் எப்படி?
20 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 1995-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்ஆப்பிரிக்க அணி 22 வெற்றியும், 3 தோல்வியும், 3 டிராவையும் கண்டுள்ளது. இந்தியா இந்த மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்த மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 211 ரன்கள் குவித்து விராட்கோலி முதலிடத்தில் உள்ளார். அதேபோல் 153 ரன்கள் குவித்து ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். பந்துவீச்சில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ள இந்தியாவின் முகமது ஷமி, 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்துள்ளார்.
பிட்ச் ரிப்போர்ட்
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை செஞ்சூரியன் மைதானம், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மைதானத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகும் என்றும், இந்த வேகப்பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதலில் விக்கெட் விட்டுவிடாமல் விளையாடினால் பந்து பழையதாக மாற மாற வேகப்பந்து வீச்சை சமாளித்து ரன்கள் குவிக்க வாய்ப்புகள் உள்ளது.
முதல் 3 நாட்கள் பிச் வேகப்பந்துவீச்சுக்க சாதகமாக இருந்தாலும், கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்களுக்கு உதவியாக இருக்கும். இங்கு கடைசியாக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் அதிகபட்ச ரன்கள் குவிக்க வாய்ப்புகள் உள்ளது. மழைக்கு சற்று வாய்ப்பு இருப்பதால் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்வதும் நல்ல முடிவாக இருக்கும் என்று, பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.