India vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ருதுராஜ், 2 ஆவது பந்தில் அவுட் ஆனார். அவர் பர்கர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
சாய் சுதர்சன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இந்திய அணி 10 ஒவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
மறுமுனையில் பொறுமையுடன் ஆடி வந்த 10 ரன்களில் அவுட் ஆனார். அவர் பர்கர் பந்தில் ஹென்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து கேப்டன் ராகுல் களமிறங்கினார். இந்திய அணி 15 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
ராகுல் கம்பெனி கொடுக்க சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் விளாசினார். இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
சாய் சுதர்சன் – ராகுல் ஜோடி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்திய அணி 25 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக ஆடி வந்த சாய் சுதர்சன் 62 ரன்களில் அவுட் ஆனார். அவர் வில்லியம்ஸ் பந்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து சஞ்ச் சாம்சன் களமிறங்கினர். இந்திய அணி 30 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 31.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தபோது, மிகவும் நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹெண்ட்ரிக்ஸ் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ரின்கு சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய அணி 35.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தபோது, அதுவரை அரைசதம் கடந்து நன்றாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 64 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பர்ஜர் பந்தில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து, அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய அணி 36.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தபோது, அடித்து விளையாடிய ரிங்கு சிங் 14 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்தபோது, கேஷவ் மஹராஜ் வீசிய பந்தில், ஹெய்ன்ரிச் கிளாசென் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, குல்தீப் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தபோது, 1 ரன் மட்டுமே அடித்திருந்த கேஷவ் மஹராஜ் பந்தில், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து ஹர்ஷ்தீப் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய 42.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தபோது, 23 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்திருந்த அக்சர் படேல், எய்டன் மர்க்ரம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஆவேஷ் கான் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய 44.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தபோது, 17 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த ஷர்ஷ்தீப் சிங் ஹெண்ட்ரிக்ஸ் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து முகேஷ் குமார் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய அணி 46.2 ஓவரில் ஆவேஷ் கான் ரன் அவுட் செய்யப்பட்டதை அடித்து, இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள், ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஸி பேட்டிங் செய்தனர். எளிதான இலக்கு என்பதால் இருவரும் நிதானமாக விளையாடினர்.
ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஸி ஜோடியைப் பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் போராட வேண்டியிருந்தது.
சிறப்பாக விளையாடிய, டோனி டி ஜோர்ஸி அரை சதம் அடித்தார். இதையடுத்து, மிகவும் நிதானமாக ஆடி வந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 27.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 130 ரன்கள் எடுத்திருந்தபோது, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 81 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹர்ஷ்தீப் சிங் பந்தில் முகேஷ் குமார் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரஸ்ஸீ வேன் டெர் துஸ்ஸென் பேட்டிங் செய்ய வந்தார்.
சிறப்பாக விளையாடிய டோனி டி ஜோர்ஸி சதம் அடித்து அசத்தினார். இவருடன் ஜோடி சேர்ந்த ரஸ்ஸீ வேன் டெர் துஸ்ஸென் அடித்து ஆடினார்.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், 41.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தபோது, 36 ரன் எடுத்திருந்த துஸ்ஸென் ரிங்கு சிங் பந்தில் சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, எய்டென் மர்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி, 42.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி டி ஜோர்ஸி, 122 பந்துகளில் 6 சிக்ஸ், 9 ஃபோர்கள் உடன் 119 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா: டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், நண்ட்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.