Advertisment

IND Vs SA 1st Test Highlights : 131 ரன்களுக்கு ஆல்அவுட் : பாக்ஸிங் டே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இந்தியா -  தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது. 

author-image
WebDesk
New Update
India vs South Africa Live Score, 1st Test Day 3

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா -  தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. 'பாக்சிங் டே' போட்டியாக முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு நடக்கிறது. 

முதல் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது.  இதனிடையே போட்டி நடக்கும் செஞ்சூரியனில் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய கேப்டன் ரோகித் 5 ரன்னுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 17 ரன்னிலும், அவருடன் ஜோடியில் இருந்த சுப்மன் கில் 2 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதன்பிறகு இணைந்த விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழப்புக்கு  91 ரன்களை எடுத்திருந்தது.விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 

உணவு இடைவேளை முடிந்து களமிறங்கிய இந்திய அணி மேற்கொண்டு ஒரு ரன் சேர்ந்த நிலையில, ஸ்கோர் 92-ஆக ஆன போது, ஸ்ரேயாஸ் அய்யர் 31 (3பவுண்டரி 1 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அரைசதத்தை நெருங்கிய விராட்கோலி, ஸ்கோர் 107 ரன்கள் ஆனபோது, 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் ஒரு பக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் அஸ்வின் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து 7-வது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்த ஷர்துல் தாக்கூர் சற்று அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 164 ஆக உயர்ந்தபோது, ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். 33 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா தடுப்பாட்டத்தில் ஈடுபட மறுமுனையில் ராகுல் 80 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தொடர்ந்து பும்ரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த முகமது சிராஜ், தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே மழை காரணமாக ஆட்டம் தடைபட்ட நிலையில், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 105 பந்துகளை சந்தித்த ராகுல் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்தார். முகமது சிராஜ் 10 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமல் களத்தில் இருந்தார். 

2ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங் 

நேற்று (புதன்கிழமை) 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்தது. முன்னதாக, போட்டி நடக்கும் செஞ்சுரியன் மைதானத்தில் மழை தூறல் போட்டது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2ம் நாளில் கே.எல் ராகுல் - சிராஜ் ஜோடி பேட்டிங் செய்த நிலையில், சில ஓவர்கள் தாக்குப்பிடித்து இந்த ஜோடியில் சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணாவுடன் ஜோடி அமைத்த ராகுல், சிக்ஸரை பறக்கவிட்டு சதம் விளாசினார். மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. 

தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்

தொடர்ந்து முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக டீன் எல்கர் - ஐடன் மார்க்ரம் ஜோடி களமிறங்கிய நிலையில், ஐடன் மார்க்ரம் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். டீன் எல்கர் - டோனி டி ஜோர்ஜி ஜோடியில், சிறப்பாக விளையாடிய எல்கர் அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய டோனி 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பும்ரா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து டோனி அவுட் ஆனார். இதனையடுத்து கீகன் பீட்டர்சன் களமிறங்கினார். தென் ஆப்பிரிக்கா அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.

பீட்டர்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்தில் போல்டானார். இதனால் டேவிட் பெடிங்காம் களமிறங்கினார். எல்கர் – டேவிட் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிவந்த எல்கர் சதம் அடித்து அசத்தினர். மறுமுனையில் ஆடி வந்த டேவிட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 200 ரன்களைக் கடந்தது. இருவரது விக்கெட்களையும் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். தென் ஆப்பிரிக்கா  அணி 52 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சற்று அதிரடியாக ஆடிய டேவிட் அரை சதம் அடித்தார். மறுமுனையில் எல்கரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டேவிட் அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் போல்டானார். டேவிட் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்தார். இதனையடுத்து கைல் வெரின்னே களமிறங்கினார். கைல் பவுண்டரி அடித்த நிலையில், தென் ஆப்பிரிக்கா  அணி 60.4 ஓவர்களில் முன்னிலை பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி 61 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

கைல் 4 ரன்களில் ப்ரசித் கிருஷ்ணா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து  மார்கோ ஜான்சன் களமிறங்கி 3 ரன்கள் எடுத்தப்போது இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்கா  அணி 66 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன்கள் முன்னிலை பெற்றது. எல்கர் 140 ரன்களுடனும், ஜென்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

3ம் நாள் ஆட்டம் - தென் ஆப்ரிக்கா பேட்டிங் 

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், டீன் எல்கர் - மார்கோ ஜான்சன் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தது. இந்த ஜோடியை உடைக்க இந்தியா கடுமையாக போராடியது. இந்த ஜோடி 30 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து. டீன் எல்கர் 287 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் 185 ரன்கள் எடுத்தபோது ஷர்துல் தாக்கூர் வீசிய 94.5 ஓவரில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு வந்த ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்னுக்கு அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சன் அரைசதம் அடித்தார். அவருடன் ககிசோ ரபாடா ஜோடி அமைத்தார். மதிய உணவு இடைவேளையின் போது தென் ஆபிரிக்க அணி 100 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 147 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 

பும்ரா வீசிய 100.5 ஓவரில் ரபாடா ஒரு ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பர்கர் 20 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். ஏற்கனவே காயம் காரணமாக கேப்டன் பவுமா களமிறங்காததால் தென்ஆப்பிரிக்க அணி 408 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், தாகூர், அஸ்வின், பிரசித் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இந்தியா 163 ரன்கள் பினனிலை

163 ரன்கள் பின்தங்கிய தனது 2-வது இன்னிங்சை தொடஙகிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்காமலும் வெளியேறினர். இதனால் இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சற்று நேரம் தாக்குபிடித்த சுப்மான் கில் 26 ரன்களுக்கும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அடுத்து களமிறங்கிய முதல் இன்னிங்சின் நாயகன் ராகுல் 4 ரன்களிலும், அஸ்வின் ரன்கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்த நிலையில், தாகூர் 2, பும்ரா 0 என வரிசையாக வீழ்ந்தனர். இதனால் இந்திய அணி 113 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய விராட்கோலி, அரைசதம் கடந்து அசத்தினார்.

ஆனாலும் விராட்கோலி, 76 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த சிராஜ் 5 ரன்களில் வீழ்ந்தார். இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 131 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்.

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score, 1st Test Day 3

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score, 1st Test Day 2

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment