இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று முன்னிலை வகிக்கிறது. ஒருநாள் தொடருக்கு முன்னதாகவே காயம் காரணமாக டி வில்லியர்ஸ் விலகிவிட, முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கேப்டன் டு பிளசிஸிற்கும் காயம் ஏற்பட்டதால், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து முற்றிலும் விலகினார். அவருக்கு பதிலாக எய்டன் மார்க்ரம் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது, விக்கெட் கீப்பரும் முக்கிய பேட்ஸ்மேனுமான டி காக்கிற்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால், அவரும் தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து தென்னாப்பிர்க்க அணியின் மேனேஜர் கூறுகையில், "ஞாயிறன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்தபோது, குயிண்டன் டி காக்கிற்கு இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இதனால், கடுமையான வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டது. எனவே 2-4 வாரங்களுக்கு அவர் கட்டாயம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்தியாவிற்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்தும் டி காக் விலகுகிறார்" என தெரிவித்துள்ளார்.
டி வில்லியர்ஸ், டு பிளசிஸ் தொடர்ந்து டி காக்கும் விலகி உள்ளதால், மீதமுள்ள நான்கு போட்டிகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்று பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது தென்னாப்பிரிக்கா நிர்வாகம்.