Advertisment

உலகக் கோப்பை யு-19 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை சாய்த்த இந்தியா; இறுதிப் போட்டிக்கு தகுதி

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
India vs South Africa Semi-Final Live, U19 World Cup 2024

ஜூனியர் உலகக் கோப்பை 2024: முதல் அரைஇறுதிப் போட்டி - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs South Africa Semi-Final Live, U19 ICC World Cup 2024: ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன், போட்செப்ஸ்ட்ரூம், கிம்பெர்லி, ஈஸ்ட் லண்டன், பெனோனி ஆகிய நகரங்களில் கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Advertisment

லீக் சுற்று 

இந்நிலையில், நடப்பு ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றன. 

சூப்பர் 6 சுற்று

இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, நேபாளம், அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2ல் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பிடித்தன. 

சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில், அரைஇறுதிப் போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஜூனியர் அணிகள் முன்னேறியுள்ளன. அரைஇறுதியில் வெற்றியை ருசிக்கும் அணிகள் பிப்ரவரி 11ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். 

முதல் அரைஇறுதிப் போட்டி - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ஜூனியர் அணிகள் மோதல் 

இந்நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா vs தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் அரைஇறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோமூர் பார்க்கில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய ஜூனியர் அணி பவுலிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் உதய் சஹாரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, ஜுவான் ஜேம்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா  ஜூனியர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  

தென் ஆப்பிரிக்கா ஜூனியர் அணியில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஸ்டீவ் ஸ்டோக் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில்,  ஸ்டீவ் ஸ்டோக் 14 ரன்னில் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த டேவிட் டீகர் டக் அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்பிறகு வந்த  ரிச்சர்ட் செலட்ஸ்வேன் தொடக்க வீரர்  லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். இதில் பிரிட்டோரியஸ் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 102 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

களத்தில் இருந்த ரிச்சர்ட் செலட்ஸ்வேன் - ஆலிவர் வைட்ஹெட் ஜோடியில் ஆலிவர் 22 ரன்னுக்கும், அடுத்து வந்த திவான் மரைஸ் 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் வந்த கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் ரிச்சர்ட் செலட்ஸ்வேன் உடன் ஜோடி அமைத்த நிலையில், அரைசதம் அடித்து 64 ரன்கள் எடுத்த நிலையில், செலட்ஸ்வேன் அவுட் ஆனார். பிறகு சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகினார். 

டிரிஸ்டன் லூஸ் 23 ரன்னுடனும், நகோபானி 7 ரன்னுடனும் களத்தில் இருக்க, தென் ஆப்பிரிக்கா ஜூனியர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில்  ராஜ் லிம்பானி 3 விக்கெட்டையும், முஷீர் கான் 2விக்கெட்டையும், நமன் திவாரி மற்றும் சௌமி பாண்டே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்தியா பேட்டிங்

245 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஆதர்ஷ் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து அர்ஷீன் குல்கர்னி 30 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த முஷீர்கான் 4 ரன்களில் வீழ்ந்ததால் இந்திய அணி 25 ரன்களில் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் உதய் ஷரன் களமிறங்கினார்.

உதய் ஷரன் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம், பிரயன்ஷூ 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சச்சின் தாஸ் ஷரனுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரின் சீரான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை இந்த ஜோடி வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வைத்தது.

இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்களை கடந்த நிலையில். ஸ்கோர் 203 ரன்களை தொட்டபோது சதத்தை நெருங்கிய சச்சின் தாஸ் 95 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 96 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஆரவல்லி அவினாஷ் 10 ரன்களுக்கும், முருகன் அபிஷேக் ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ஷரன் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

49-வது ஓவரில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்து ஆட்டம் டையான நிலையில், பொறுப்புடன் விளையாடிய உதய் ஷரன் 124 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்றாலும், ராஜ் லம்பானி பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score, U19 World Cup 2024 Semi-Final

இந்திய ஜூனியர் அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, சௌமி பாண்டே.

தென் ஆப்பிரிக்கா ஜூனியர் அணி: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்டோக், டேவிட் டீகர், ரிச்சர்ட் செலட்ஸ்வேன், திவான் மரைஸ், ஜுவான் ஜேம்ஸ் (கேப்டன்), ஆலிவர் வைட்ஹெட், ரிலே நார்டன், டிரிஸ்டன் லூஸ், நகோபானி மொகோய்னா, குவேனா மபாகா

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India Vs South Africa U19 ICC World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment