India-vs-south-africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (டிச. 26) முதல் தொடங்குகிறது. 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது.
மோசமான சாதனை
பொதுவாக, தென் ஆப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய அணி அங்கு இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை என்கிற மோசமான சாதனையை வைத்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இதுவரை 23 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இதில் 4 வெற்றிகள், 12 தோல்விகள் மற்றும் 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. மொத்தமாக 9 டெஸ்ட் தொடர்களில் ஆடிய இந்திய அணி ஒரு முயற்சியைத் தவிர மற்ற அனைத்திலும் தென் ஆப்பிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா முதன்முதலில் நவம்பர் 1992ல் முகமது அசாருதின் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பின்னர் சச்சின் டெண்டுல்கர் 1996ல் கேப்டன் பொறுப்பை வகித்தார். அவரது தலைமையிலான இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது.
அதன்பிறகு, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி (கே.எல். ராகுல் ஒரு போட்டிக்கு கேப்டன்) ஆகியோர் கேப்டன்களாக களமிறங்கினர். ஆனால், இந்திய அணியை தொடரை கைப்பற்றும் வெற்றிக்கு இதுவரை யாரும் அழைத்துச் செல்ல முடியவில்லை.
இந்தியாவின் 4 டெஸ்ட் வெற்றிகள் 2006, 2010, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ராகுல் டிராவிட், எம்.எஸ் தோனி மற்றும் இரண்டு முறை கோலி கேப்டனாக இருந்து நேரத்தில் வந்துள்ளன.
2010-11ல் ஒரு தொடரைத் தவிர மற்ற அனைத்து தொடரிலும் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா தோற்கடித்துள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜாகீர் கானின் 6 விக்கெட்டுக்கள் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மனின் 96 ரன்கள் எடுத்ததன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
வரலாறு படைக்குமா இந்தியா?
இப்படியொரு மோசமான சாதனையை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள். இந்திய டெஸ்ட் அணியை கேப்டன் ரோகித் வழிநடத்தி தொடக்க வீரராக களமிறங்குவார். அவருடன் இளம் வீரரான சுப்மான் கில் களமாடுவார்.
கோலி வழக்கம் போல் 3வது வீரராகவும், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் 4 மற்றும் 5வது இடங்களில் ஆடுவார்கள். தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணைகேப்டன்), பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.