scorecardresearch

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறந்த வெற்றிதான்; ஆனால்…?

அப்படி நடந்திருந்தால் வெற்றியை நோக்கிய இந்தியாவின் பயணம் கடினமானதாக இருந்திருக்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறந்த வெற்றிதான்; ஆனால்…?

அங்கதன்

வெற்றியும் தோல்வியும் தம்மளவில் வலுவானவை. வெற்றி என்பது போட்டியின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை நியாயப்படுத்திவிடும். தோல்வி என்பது அதே முடிவுகளைத் தவறானதாகக் காட்டும். முடிவு நல்லபடியாக அமைந்துவிட்டால் அதற்கு முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவே தோன்றும். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நேற்று (ஜூன் 11) நடைபெற்ற ஆட்டத்தைப் பார்க்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

சிறப்பான பந்து வீச்சு, துடிப்பான களத் தடுப்பு, பதற்றமில்லாத மட்டையாட்டம் ஆகியவற்றால் வென்று இந்தியா சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் அரை இறுதிக்குச் சென்றுள்ளது. மட்டையாட்டத்தில் மந்தமாகச் செயல்பட்டுத் தவறுகள் புரிந்த தென்னாப்பிரிக்கா தோற்றுப் போனது. இந்தியாவின் வெற்றி மிகச் சிறப்பானது என்றாலும் ஒரு சில பிரச்சினைகளை இந்த வெற்றி மூடி மறைக்க அனுமதிக்கக் கூடாது.

அஸ்வினின் இடம்

கடந்த இரு ஆட்டங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியினர் சுழல் பந்தை நன்கு ஆடக்கூடியவர்கள் என்பதால் அஸ்வின் சேர்க்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது. அதே காரணம் இலங்கை அணிக்கும் பொருந்தும் என்பதால் அஸ்வின் ஏன் ஆடவில்லை என்னும் கேள்வி எழவில்லை. ஆனால், அஸ்வினைப் போன்ற சிறந்த சுழல் பந்து வீச்சாளர் எந்த அணிக்கு எதிராகவும் எந்த ஆடுகளத்திலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். ரவீந்திர ஜடேஜா நன்றாகப் பந்து வீசுவதும், அவர் ஆல் ரவுண்டராக இருப்பதும் அவரது இடத்தை உறுதிசெய்கின்றன. மட்டை பிடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. களத் தடுப்பில் வழக்கம்போலவே மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். எனவே ஜடேஜாவைச் சேர்த்தது குறித்துக் கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்காது.

ஆனால், கேதார் ஜாதவைச் சேர்த்தது ஏன் என்னும் கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியாது. அதுவும் தென்னாப்பிரிக்க அணியுடனான மிக முக்கியமான போட்டியில் அவருக்குப் பதில் அஸ்வினைச் சேர்த்திருக்கலாம். உமேஷ் யாதவை நீக்கினால் அவருடைய இடத்தில் முகம்மது ஷமியைச் சேர்த்திருக்க வேண்டும். புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பூம்ரா, அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகிய ஐவர் போதும் என்று நினைத்திருந்தால் ஜாதவுக்குப் பதில் தினேஷ் கார்த்திக் அல்லது அஜிங்க்ய ரஹானேவைச் சேர்த்து மட்டை வீச்சை வலுப்படுத்தியிருக்க வேண்டும்.

இலங்கையுடனான போட்டியில் நான்கு வேகப் பந்து வீச்சாளர்களும் (புவனேஸ்வர், பூம்ரா, பாண்ட்யா, உமேஷ்), ஒரு சுழல் பந்து வீச்சாளரும் (ஜடேஜா) இருந்தும் விராட் கோலியும் ஜாதவும் சில ஓவர்களை வீச வேண்டியிருந்தது. அந்த ஓவர்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் ஜாதவை ஆல் ரவுண்டர் என்னும் முறையில் அணியில் வைத்திருப்பது ஏன்? எதிரணியைத் தொல்லைக்கு உள்ளாக்கும் அளவுக்கு அவரால் வீச முடியவில்லை. மட்டை வீச்சிலோ கார்த்திக், ரஹானே ஆகியோர் அவரை விடவும் சிறந்தவர்கள்; அனுபவசாலிகள். எனவே ஜாதவை அணியில் நீடிக்க வைப்பதன் அவசியம் என்ன?

ஆக, அஸ்வினுக்காக ஒரு வேகப் பந்து வீச்சாளரை நீக்குவதற்குப் பதில் ஜாதவை நீக்கியிருக்கலாம். அஸ்வினும் ஓரளவுக்கு ரன் எடுக்கக்கூடியவர்தான். தென்னாப்பிரிக்க அணி சுழல் பந்துக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக ஆடாது என்பதால் மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள், இரு சுழல் பந்து வீச்சாளர்கள் என்பதே சரியான கணக்கு என முடிவெடுத்திருந்தால், இந்த ஐவர் மீது நம்பிக்கை வைத்து ஜாதவுக்குப் பதில் வலுவான மட்டையாளரை எடுத்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா 250 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் இந்தியாவின் மட்டையாளர்களுக்குத் தொல்லை ஏற்படுத்தும் அளவுக்கு அவ்வணியில் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கைவிட்ட மட்டையாளர்கள்

தென்னாப்பிரிக்காவால் கணிசமான ரன்களைக் குவிக்க முடியாததற்கு அவ்வணியின் மட்டையாளர்கள்தான் காரணம். இந்தியப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே வீசினாலும் தென்னாப்பிரிக்க அணியினர் அதீதமான எச்சரிக்கையோடு மந்தமாக ஆடினார்கள். ஆழமான மட்டை வலுக் கொண்ட அந்த அணி இன்னும் துணிச்சலோடு ஆடியிருக்கலாம். ஏபி டிவிலியர்ஸும் டேவிட் மில்லரும் ரன் அவுட் ஆனது தேவையற்ற விபத்து. ஹஷிம் ஆம்லா 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது அணியின் ரன் விகிதம் 5க்குக் குறைவாகவே இருந்தது. அடுத்த ஜோடி இன்னும் மெதுவாக ஆடியது. அடுத்து வந்த டிவிலியர்ஸ் 12 பந்துகளில் 16 ரன் எடுத்தார். டிவிலியர்ஸ் அவுட் ஆகும்போது ரன் விகிதம் 5க்கு நெருக்கமாக வந்துவிட்டிருந்தது. மில்லர் விரைவிலேயே ரன் அவுட் ஆகியிருக்காவிட்டால் அணியின் எண்ணிக்கை 250ஐத் தொட்டிருபதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி நடந்திருந்தால் வெற்றியை நோக்கிய இந்தியாவின் பயணம் கடினமானதாக இருந்திருக்கும். குறைவான இலக்கைத் துரத்திய இந்திய அணியின் ஷிகர் தவணும் விராட் கோலியும் பதற்றமில்லாமல் இந்தியாவைக் கரைசேர்த்தார்கள்.

கடைசியில் எல்லாம் சுபமாக முடிந்துவிட்டாலும் அணித் தேர்வு விஷயத்தில் இந்தியா மேலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா அரை இறுதியில் வங்க தேசத்தைச் சந்திக்கவிருக்கிறது. வங்கதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நியூஸிலாந்துடன் அவர்கள் ஆடிய ஆட்டம் காட்டிவிட்டது. எனவே இந்தியா மேலும் கூடுதலான மட்டை வலுவுடன் களம் இறங்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs southafrica team selection analaysis