இலங்கை சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Sri Lanka LIVE Score, 1st ODI
இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இலங்கை பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா - அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன்னில் சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸ் 14 ரன்னுக்கு துபே பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு களத்தில் இருந்த பதும் நிசாங்கா - சதீர சமரவிக்ரமா ஜோடி அடுத்த 5 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில், இந்த ஜோடியில் சதீர சமரவிக்ரமா 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த கேப்டன் சரித் அசலன்கா 2 பவுண்டரியை விரட்டி குலதீப் பந்தில் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்து ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய ஜனித் லியனகே 20 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதனிடையே, ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் பொறுமையாக மட்டையைச் சுழற்றி வந்த தொடக்க வீரர் பதும் நிசாங்கா அரைசதம் விளாசினார். தனது சிறப்பான ஆட்டத்தை தொடர நினைத்த அவர் 75 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வனிந்து ஹசரங்கா களமிறங்கினார். அப்போது இலங்கை அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. 2 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த ஹசரங்கா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தனஞ்ஜெயா களமிறங்கினார். இதற்கிடையில் சிறப்பாக ஆடி வந்த துனித் அரை சதம் அடித்தார். தனஞ்ஜெயா 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய முகமது ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், இலங்கை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப், அக்சர் தலா 2 விக்கெட்களையும், சிராஜ், துபே, சுந்தர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 231 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் கில் களமிறங்கினார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். கில் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி சிறிது நேரம் நிதானமாக விளையாடினர். மறுமுனையில் ஆடிய ரோகித் அரை சதம் விளாசினார். இருப்பினும் 47 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து கோலியுடன் ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்த நிலையில், கோலி 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ராகுல் களமிறங்கிய சிறிது நேரத்திலே ஸ்ரேயாஸ் 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ராகுலும் அக்சரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 31 ரன்களிலும், அக்சர் 33 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்து களமிறங்கிய சிவம் துபே அதிரடியாக ஆடினார். மறுமுனையில் இறங்கிய 2 ரன்களில் அவுட் ஆனார். 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்திருந்த துபே 47 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் 25 ரன்களில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து ரன் எண்ணிக்கையை சமன் செய்திருந்தது.
கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய அர்ஷ்தீப் முதல் பந்திலே எல்.பி.டபுள்யூ ஆனார். அசலங்கா அந்த ஓவரை சிறப்பாக வீசினார். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரு அணிகளின் ரன்களும் சமமாக இருந்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இலங்கை தரப்பில் ஹசரங்கா, அசலங்கா தலா 3 விக்கெட்களையும், துனித் 2 விக்கெட்களையும், பெர்னாண்டோ மற்றும் தனஞ்ஜெயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்தியா – இலங்கை இடையிலான முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இரு அணிகளின் பிளேயிங் 11 வீரர்கள் பட்டியல்:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்,குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.
இலங்கை: பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, சரித் அசலன்கா (கேப்டன்), ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, அகில தனஞ்சயா, அசிதா பெர்னாண்டோ, முகமது ஷிராஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.