sports | india-vs-srilanka: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக 2 நாட்கள் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று கொழும்பு மைதானத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்; இலங்கை பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: India vs Sri Lanka Live Score, Asia Cup 2023
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இலங்கை:
பாதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ்(வ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேட்ச்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பத்திரன
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ரோகித் அதிரடி காட்ட, கில் நிதானமாக விளையாடினார். இருவரும் முதல் விக்கெட்க்கு 80 ரன்கள் சேர்த்தனர். சுப்மன் கில் 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து கோலி களமிறங்கிய நிலையில், ரோகித் அரை சதம் அடித்தார். கோலி 3 ரன்களில் அவுட் ஆக, சிறிது நேரத்திலே ரோகித் 53 ரன்களில் அவுட் ஆனார். இந்த மூவர் விக்கெட்டையும் துனித் வெல்லலகே வீழ்த்தினார். அடுத்ததாக இஷான் கிஷன் மற்றும் ராகுல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருப்பினும் இஷான் 33 ரன்களிலும், ராகுல் 39 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்து களமிறங்கிய பாண்டியா 5 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய அக்சர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். இதற்கிடையில் களமிறங்கிய பும்ரா 5 ரன்களில் ஆட்டமிழக்க, குல்தீப் டக் அவுட் ஆனார். அடுத்ததாக சிராஜ் 5 ரன்கள் எடுத்திருந்தப்போது, அக்சர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய அணி 49.1 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினர். துனித் 5 விக்கெட்களையும், அசலங்கா 4 விக்கெட்களையும், தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 214 ரன்கள் இலக்குடன் இலங்கை விளையாடி வருகிறது.
இலங்கை பேட்டிங்
இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிஸ்ஸங்க 6 ரன்களிலும், கருணரத்னே 2 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 15 ரன்களிலும், சதீரா 17 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் ஜோடி சேர்ந்த அசலங்கா மற்றும் தனஞ்ஜெயா சிறிது நேரம் நிலைத்து ஆடி ரன் சேர்த்தனர். இருப்பினும் இந்த ஜோடியை குல்தீப் பிரித்தார். அசலங்கா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷனகா 9 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து தனஞ்ஜெயாவுடன் துனித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன் சேர்த்து வந்த நிலையில், தனஞ்ஜெயா 41 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய தீக்ஷனா 2 ரன்களிலும் ரஜிதா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். கடைசியாக களமிறங்கிய பதிரனா டக் அவுட் ஆனார். இதனையடுத்து இலங்கை அணி தோல்வியை தழுவியது. ஷனகா 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 41.3 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது, இதனையடுத்து இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்களையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மழை வாய்ப்பு எப்படி?
கொழும்புவில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகளை பொறுத்தவரை, மதியம் 1 மணி அளவில் 49 சதவீதம் மழை பெய்யவும், 2 மற்றும் 3 மணி அளவில் 60 சதவீதமும், 4 மணி அளவில் 40 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 34 சதவீதமும் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாலை 6 மணி அளவில் 37 சதவீதமும், இரவு 7 மணி அளவில் 43 சதவீதமும், 8 மணி அளவில் 47 சதவீதமும், 9 மணி அளவில் 51 சதவீதமும், இரவு 10 மணி அளவில் 35 சதவீதமும், 11 மணி அளவில் 29 சதவீதமும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“