IND vs SL 2023, India vs Sri Lanka 3வது ODI ஸ்கோர் அப்டேட்ஸ்: இந்தியா இலங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இந்தியா களமிறங்குகிறது. அதேநேரம் கடைசிப்போட்டியிலாது வெல்லும் முனைப்பில் இலங்கை களமிறங்குகிறது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்குப் பதிலாக விளையாடும் லெவன் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்.
தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லலகே ஆகியோருக்கு பதிலாக அஷேன் பண்டார மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோரை கொண்டு வந்து இலங்கையும் இரண்டு மாற்றங்களைச் செய்தது.
இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்
இந்தியா : ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
இலங்கை : அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அஷேன் பண்டார, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, ஜெஃப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்னே, கசுன் ராஜித, லஹிரு குமார
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். இருவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்திய அணி 15.2 ஓவரில் 95 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா 42 ரன்களில் அவுட் ஆனார். அவர் கருணரத்னே பந்தில் பெர்ண்டான்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரோகித் சர்மா 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்ததாக விராட் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் அரைசதம் அடித்த சுப்மன் கில், அதன் பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். பவுண்டரிகளாக விளாசிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடி வந்த கோலி அரை சதம் விளாசினார். இந்திய அணி 226 ரன்கள் எடுத்திருந்தபோது கில் 116 ரன்களில் அவுட் ஆனார். ரஜிதா அவரை போல்டாக்கினார். கில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசினார்.
அடுத்து கோலியுடன் ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்ரேயாஸ் ஒரு புறம் கம்பெனி கொடுக்க சிறப்பாக ஆடிய கோலி சதம் அடித்தார். இந்திய அணி 334 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்ரேயாஸ் 38 ரன்களில் அவுட் ஆனார். லகிரு குமார பந்தில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் 7 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோலி 150 ரன்களைத் தாண்டினார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 4 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்ததாக அக்சர் படேல் களமிறங்கி, 2 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோலி 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் விளாசினார். இலங்கை தரப்பில், ரஜிதா மற்றும் லகிரு குமார தலா 2 விக்கெட்களையும், கருணரத்னே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இலங்கை பேட்டிங்
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்க மற்றும் நுவனீடு களமிறங்கினர். அவிஷ்க 1 ரன்னில் 2 ஆவது ஓவரிலே அவுட் ஆகினார். சிராஜ் பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவிஷ்க அவுட் ஆனார். அடுத்துக் களமிறங்கிய குஷல் மெண்டிஸ் 4 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஷமி பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த அசலங்கா 1 ரன்னில் வெளியேறினார். ஷமி பந்தில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அசலங்கா அவுட் ஆனார்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்த நுவனிடு 19 ரன்களில் சிராஜ் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஷனகாவை குல்தீப் போல்டாக்கி வெளியேற்றினார். ஷனகா 11 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹசரங்கா 1 ரன்னில் அவுட் ஆனார். அவரை சிராஜ் போல்டாக்கினார். பின்னர் வந்த கருணரத்னே 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் இலங்கை அணி 50 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது.
அடுத்து வந்த துனித் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஜிதாவும், லகிரு குமாரவும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். லகிரு குமார 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பண்டாரா டக் அவுட் ஆக இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணித் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களையும், ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil