Asian-games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டிகள் கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 2 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் மோதுகின்றன.
ஆண்களுக்கான போட்டியில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீன தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஈரான், பாகிஸ்தான், கொரியா குடியரசு, மலேசியா ஆகிய அணிகளும் உள்ளன. பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியா, சீன தைபே, தாய்லாந்து, கொரியா குடியரசு ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் வங்கதேசம், நேபாளம், ஈரான் அணிகளும் உள்ளன.
இந்த அணிகள் லீக் சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கும். ஒவ்வொரு ஆடவர் போட்டியின் கால அளவு 45 நிமிடங்களாகவும், பெண்களுக்கான போட்டிகள் 35 நிமிடங்களாகவும் இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்குவார்கள், தோல்வியுற்றவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான இரண்டு இறுதிப் போட்டிகளும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் 7 முறை பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், இந்திய பெண்கள் கபடி அணி 2010 முதல் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தாய்லாந்தை சாய்த்த இந்தியா
இந்நிலையில், இன்று காலை நடந்த கபடி ஆண்கள் குழு பிரிவு ஏ - போட்டி 5ல் இந்தியா - தாய்லாந்து மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய கபடி அணிக்கு ரைடர்கள் நவீன் குமார் மற்றும் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோர் தொடக்க நிமிடங்களில் விரைவான ரெய்டுகளால் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற உதவினார்கள்.
வங்கதேச அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தைப் போலவே, தாய்லாந்தையும் ஆல்-அவுட் செய்ய இந்தியா அதிக நேரம் எடுக்கவில்லை. முதல் 5 நிமிடங்களில் இந்தியா 11-2 என முன்னிலை பெற்றது. தாய்லாந்தின் பிரமோத் சாய்சிங் சூப்பர் ரெய்டு மூலம் 15-5 என சமன் செய்தார். ஆயினும்கூட, இந்தியா விரைவில் தங்களது முன்னணி ரைடர்காளான நவீன் குமார் மற்றும் பின்னர் பர்வேஷ் பைன்ஸ்வால் மற்றும் சுனில் குமார் ஆகியோர் தங்கள் பொறுப்பை மீண்டும் தொடங்குவதற்கு புத்துயிர் கொடுத்தனர்.
முதல் பாதியில் தாய்லாந்தை இந்தியா 3 ஆல்-அவுட்களை எடுத்து 37-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது பாதியில் குறைந்த வேகத்தை காட்டினாலும், இடைவேளைக்குப் பிறகு, இந்தியாவின் அஸ்லாம் இனாம்தார், ஆகாஷ் ஷிண்டே, நிதின் ராவல் ஆகியோர் அதிரடி காட்டாத் தொடங்கினர். அஸ்லாம் இனாம்தார் மற்றும் ஆகாஷ் ஷிண்டே ஆகியோர் இந்தியாவை 2வது பாதிக்குப்பிறகு 28 புள்ளிகளில் இருந்து 37 புள்ளிகளாக உயர்த்த உதவினர்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்திய ஆண்கள் கபடி அணி 63-26 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றுள்ள பவன் செஹ்ராவத் தலைமையிலான இந்திய அணி ஆசிய விளையாட்டு 2023 கபடி குழு ஏ புள்ளிகள் அட்டவணையில் தற்போது முதலிடத்தில் உள்ளது. சீன தைபே அணி தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனாலும், இந்தியாவின் +74 புள்ளிகளுடன் உடன் ஒப்பிடும்போது +37 புள்ளிகள் வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.
அடுத்ததாக, இந்திய கபடி அணி நாளை வியாழக்கிழமை சீன தைபே அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 55 -11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.