8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs United Arab Emirates U19 Asia Cup 2024, LIVE Cricket Score
இந்நிலையில், 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியைப் பெற்றது. இதனையடுத்து, ஜப்பானுக்கு எதிராக நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - யு.ஏ.இ அணிகள் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி கண்டால் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறும் என்கிற சூழல் நிலவியது.
இந்தியா vs யு.ஏ.இ மோதல்
இந்த நிலையில், இந்தியா - யு.ஏ.இ அணிகள் மோதும் ஆட்டம் ஷார்ஜா நடைப்பெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற யு.ஏ.இ அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.தொடக்கம் முதலே இந்திய அணி மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தியது. அதனால், ரன்கள் சேர்க்க யு.ஏ.இ. அணி கடுமையாக திணறியது
யு.ஏ.இ அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் கான் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அற்புதமான பவுலிங்கை வெளிப்படுத்திய இந்தியா அணி தரப்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டையும், ஹர்திக் ராஜ், சேத்தன் சர்மா தலா 2 விக்கெட்டையும், ஆயுஷ் மத்ரே, கே.பி.கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதனையடுத்து, 138 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த இந்திய அணி களமாடியது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த ஆயுஷ் மத்ரே - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க யு.ஏ.இ அணி பவுலர்கள் போராடினர். அவர்களின் போராட்டம் தோல்வியில் தான் முடிந்தது.
ஆயுஷ் - வைபவ் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 138 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 16.1 ஓவரில் எட்டிப்பிடித்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆயுஷ் மத்ரே 67 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 76 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் ஆசிய கோப்பை தொடருக்கான அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (டிச.6) ஷார்ஜாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா இலங்கை அணியுடன் மோதுகிறது. துபாயில் நடக்கும் முதல் அரைஇறுதியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. அரைஇறுதியில் வெற்றியை ருசிக்கும் அணிகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாயில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆண்ட்ரே சித்தார்த் சி, முகமது அமான் (கேப்டன்), கே.பி.கார்த்திகேயா, நிகில் குமார், ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் ராஜ், சமர்த் நாகராஜ், சேத்தன் சர்மா, யுதாஜித் குஹா.
யு.ஏ.இ: அக்ஷத் ராய், ஆர்யன் சக்சேனா, யாயின் ராய், ஈதன் டிசோசா, முஹம்மது ராயன் கான், அயன் அப்சல் கான் (கேப்டன்), நூருல்லா அயோபி, முடித் அகர்வால் (விக்கெட் கீப்பர்), உத்திஷ் சூரி, ஹர்ஷ் தேசாய், அலி அஸ்கர் ஷம்ஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“