Advertisment

IND vs WI 2nd Test: தொடர் மழையால் டிரா ஆன டெஸ்ட்... இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தல்!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய கடைசி மற்றும் 2வது டெஸ்டில் இறுதி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் போட்டி சமனில் முடிந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs wi

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

India Vs West Indies 2nd Test Match Score Updates: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் லேசான காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக அறிமுக பவுலராக முகேஷ் குமார் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரேமன் ரீபருக்கு பதிலாக புதுமுக வீரர் கிர்க் மெககென்சி சேர்க்கப்பட்டார்.

இந்த போட்டி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 100-வது டெஸ்டாகும். இதையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் கிஷோர் ஷலோ, முன்னாள் வீரர் பிரையன் லாரா ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினர்.

முதல்நாள் ஆட்டம்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் - இந்தியா பேட்டிங்

இந்த ஆட்டத்தில் 'டாஸ்' ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வாலும் அரைசதத்தை எட்டினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை உடைக்க முடியவில்லை.

இந்த ஜோடி 139 ரன்கள் குவித்த போது தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் (10 ரன்) நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும் 80 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் ரகானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது.

இந்த ஜோடியில் விராட் கோலி தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் நாட்டம்: 500-வது சர்வதேச போட்டியில் சதம் விளாசிய கோலி

2வது நாள் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி சதம் அடித்தார். தனது 500-வது போட்டியில் சதம் விளாசிய கோலியை மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பாராட்டினார் இவரைத் தொடர்ந்து, ஜடேஜா அரைசதம் அடித்தார்.

சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலி 121 ரன்கள் எடுத்திருந்தபோது, அல்ஜாரி ஜோசப்பால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அஜிங்க்யா ரஹானே களம் இறங்கினார். இவர் 8 ரன் எடுத்திருந்த நிலையில், ஷனான் காப்ரியல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து இஷான் கிஷண் களம் இறங்கினார். ஜடேஜா 61 ரன் எடுத்திருந்த நிலையில், கெமர் ரோச் பந்தில், ஜோஷ்வா டா சில்வாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதை அடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கினார். 25 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷண் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஜோஷ்வா டா சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, வந்த ஜெயதேவ் உனத்கட் 7 ரன் எடுத்திருந்த போது, ஜொமெல் வாரிக்கன் வீசிய பந்தை கிரீஸுக்கு வெளியே சென்று ஆட முயற்சி செய்தபோது, விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார்.

அடுத்து வந்த முஹமது சிராக் முகமது சிராஜ் 11 பந்துகளை சந்தித்த நிலையில் ஜொமெல் வாரிக்கன் வீசிய பந்து கால் காப்பில் பட்டு, எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுணையில் ஒருநாள் போட்டியைப் போல விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அரை சதம் அடித்தார். இறுதியாக அஸ்வின் 56 ரன் எடுத்திருந்தபோது, கெமர் ரோச் பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து போல்ட் அவுட் ஆனார். இதன மூலம் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் 1 பந்து மட்டுமே சந்தித்த நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், கெமர் ரோஜ் மற்றும் ஜொமெல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் மற்றும் டேஜெனரைன் சந்தர்பால் களம் இறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி பங்காளி ஆட்டத்தில் 50 ரன்களைக் கடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன் எடுத்திருந்தது. அப்போது 33 ரன் எடுத்திருந்த சந்தர்பால் அஸ்வின் வீசிய பந்தை ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த கிர்க் மெக்கென்சி 14 ரன்னுடனும் கிரேக் பிராத்வைட் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் தேஜ்நரின் சந்தர்பால் 33 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 37 ரன்னுடனும், கிர்க் மெக்கென்சி 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம்

இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்து நல்ல தொடக்கம் ஏற்படுத்தினர். ஸ்கோர் 117 ரன்னாக உயர்ந்த போது கிர்க் மெக்கென்சி 32 ரன்னில் (57 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் அவுட் ஆனார்கள். தொடர்ந்து, ஜெர்மைன் பிளாக்வுட், தொடக்க வீரர் பிராத் வெய்ட்டுடன் ஜோடி சேர்ந்தார். 170 பந்துகளில் அரைசதத்தை கடந்த பிராத்வெய்ட் 75 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து களமிறங்கிய பிளாக்வுட் 20 ரன்களும், டி சில்வா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3-ஆம் நாள் ஆட்டம் நேர முடிவில் 108 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. அலிக் அதானேஷ் 37 ரன்னுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம்:

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில், ஆரம்பத்திலேயே, அலிக் அதானேஷ் 37 ரன்களுக்கு முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் 15 ரன்கள் , அல்ஜாரி ஜோசப் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 115.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில், சிராஜ் 5 விக்கெட் , முகேஷ்குமார் , ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.

இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். இதனால், இந்திய அணி வெறும் 35 பந்துகளிலேயே 50 ரன்களை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரோஹித் - ஜெய்ஸ்வால் ஜோடி புதிய சாதனை படைத்தது.

இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்டில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும். அவர் 57 ரன்களில் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் 38 ரன்களில் (30 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருந்த போது 2-வது முறையாக மழை பாதிப்பால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர், ஆட்டம் தொடங்கியபோது சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் இஷான் கிஷன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அப்போது சுப்மன் கில் 29 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பிராத்வெய்ட் 28 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய மெக்கன்சி (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர் 4-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் வுட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்னர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது.

5-ம் நாள் ஆட்டம்

5-வது மற்றும் கடைசி நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் மழை தொடர்ந்து குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், முகேஷ் குமார், முஹமது சிராக்

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), டேஜெனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ஷானன் கேப்ரியல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Cricket West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment