India vs West Indies Score 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்னில் வீழ்த்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மோதின. இப்போட்டியானது, டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடக்கிறது.
டாஸ் வென்ற வெ.இ பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங்
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன், சுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியின் ஸ்டோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இடையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த இஷான் கிஷன் 64 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.4 ஓவர்களில் 143 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் வெளியேறினாலும், அடுத்த களமிறங்கிய சாம்சன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த சாம்சன், 41 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமனையில் அதிரடியாக விளையாடிய கில் சதத்தை நெருங்கினாலும் 92 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 70 ரன்களும், ஜடேஜா 8 ரன்களுடளும் களத்தில் இருந்தனர். சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்து வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், ஷீப்ஹார்டு 2 விக்கெட்டுகளும், ஜோசப், மொட்டீ, கேரியாஹ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 352 ரன்கள் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துல்லியமாக பவுலிங் செய்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் எடுக்க முடியாமல் தவித்தது. விக்கெட்டுகள் வீழ்ந்தன.
கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப் - குடகேஷ் மோட்டி ஆகியோர் ரன் எடுக்க போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களைக் கடந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் குடகேஷ் மோட்டி 39 ரன்கள், ஆலிக் அதான்சே 32 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.