Ind vs WI 3rd ODI live score update in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:
வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்):
ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), பிராண்டன் கிங், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், ஹேடன் வால்ஷ், கெமர் ரோச்
இந்தியா (பிளேயிங் லெவன்):
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு!
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னிலும், ஷிகர் தவன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த முன்னாள் கேப்டன் கோலி பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். இதனால், அவர் ரன் மழை பொழிவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றமே மிஞ்சியது.
இதன்பிறகு, களத்தில் இருந்த ஸ்ரேயஸ் அய்யர் - ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி, அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியில் ஒரு சிக்ஸர் 6 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்த ரிஷப் பண்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஸ்ரேயஸ் அய்யர் 80 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், ஹேடன் வால்ஷிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 6 ரன்னில் அவுட் ஆனார். பிறகு வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் (38), மற்றும் தீபக் சாகர் (33) மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், தீபக் சாகர் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு வியப்பூட்டினார். இதனால், இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் மற்றும் ஹேடன் வால்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும் ஒடியன் ஸ்மித் மற்றும் பேபியன் ஆலன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
266 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஹோப் மற்றும் ப்ரெண்டன் கிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். சிறிது நேரத்திலே ப்ரெண்டன் கிங் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ப்ரூக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவர்கள் இருவரையும் தீபக் சாஹர் அவுட் ஆக்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ப்ரோவோ மற்றும் பூரன் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இருப்பினும் ப்ரோவோ 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹோல்டர் 6 ரன்களிலும், ஆலன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். பின்னர் பூரனுடன் ஜோசப் ஜோடி சேர்ந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பூரன் 34 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து ஜோசப் உடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் அதிரடியாக ஆடினார். ஸ்மித் 18 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இவர் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார். அடுத்து வந்த வால்ஷ் 13 ரன்களில் அவுட் ஆக, நிதானமாக ஆடிய ஜோசப் 29 ரன்களில் அவுட் ஆனார். இத்துடன் மேற்கு இந்திய தீவுகளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 37.1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.