India vs West Indies 1st ODI Live Score: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒருநாள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில், இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் களம் இறங்கினர். 3வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் 2 (9) ரன்கள் எடுத்திருந்த கைல் மேயர்ஸ் ஹர்திக் பாண்ட்யா பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, அலிக் அதானாஸ் வந்தார். அடித்து விளையாடிய அலிக் அதானாஸ் 22 (18) ரன் எடுத்திருந்த நிலையில், முகேஷ் குமார் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, ஷாய் ஹோப் வந்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய பிராண்டன் கிங் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து போல்ட் அவுட் ஆனார். அடுத்து ஷிம்ரோன் ஹெட்மேய்ர் வந்தார். இவர் 11 (19) ரன் எடுத்திருந்தபோது ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ரோவ்மன் பவெல் 4 (4) ரன் எடுத்திருந்தபோது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவரை அடுத்து வந்த ரோமாரியோ ஷெபர்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
அடுத்து வந்த டொமினிக் ட்ராக்ஸ் அதே போல வந்த வேகத்திலேயே 1 ரன் மட்டுமே எடுத்து, குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த யானிக் கரியா குல்தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
ஒரு புறம் மலமலவென விக்கெட்டுகள் விழுந்தாலும், ஷாய் ஹோப் உறுதியாக நின்று விளையாடினார். ஷாய் ஹோப் 43 (45) ரன்கள் எடுத்திருந்த நிலையில், இவரும் குல்தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
இவரை அடுத்து வந்த ஜெய்டன் சீல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு சுருண்டது.
இதன் மூலம், இந்திய அணி 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷண் மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். 4வது ஓவர் முடிவில் 7 (16) ரன்கள் எடுத்திருந்த ஷுபமன் கில் ஜெய்டன் சீல்ஸ் பந்தில் பிராண்டன் கிங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 (25) ரன்கள் எடுத்த நிலையில், குடகேஷ் மோதை பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா யானிக் கரியாவால் ரன் அவுட் செய்து வெளியேற்றப்பட்டார். அடுத்து ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷண் அரை சதம் அடித்த நிலையில், 52 (46) ரன்களில் குடகேஷ் மோதை பந்தில் பவெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெற்றிக்கு அழைத்து செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஷர்துல் தாக்கூர் 1 ரன் மட்டுமே எடுத்து யானிக் கரியா பந்தில் அலிக் அதானாஸ் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜடேஜா 16 (21) ரன்களுடனும் ரோஹித் சர்மா 12 (19) ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
வெஸ்ட் இண்டீஸ்:
ஷாய் ஹோப் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி.
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.