India vs West Indies Live Score, 2nd ODI in Tamil: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா செயல்பட உள்ளார். இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், சுப்மான் கில் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 16.5 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்தபோது சுப்மான் கில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், 9 ரன்களிலும், அரைசதம் கடந்த தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 55 பந்துகளில் 55 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 1 ரன்னிலும், ஹர்டிக் பாண்டியா 7 ரன்களிலும், ஆட்டமிழந்த நிலையில் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய சூரியகுமார் யாதவ் 24 ரன்களும், ஜடேஜா 10, ஷர்துல் தாகூர் 16, உம்ரான் மாலிக் 0 ஆகியோரும் விரைவில் வெளியேறினர். இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மொட்டி, ஷூப்ஹார்டு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து 182 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil