இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடைபெற்றது.
Read In English : India vs Zimbabwe 3rd T20I 2024 Live Score: Jaiswal-Gill start well for IND 41/0 vs ZIM in Harare
டி20 உலககோப்பை தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் வீரர்கள் களமிறங்கியுள்ள இந்த அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது போட்டியில் அசத்தலாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், 3-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் – கேப்டன் சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இந்த ஜோடி 8.1 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தபோது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், 27 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா முந்தைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதமடித்த நிலையில், இந்த போட்டியில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டன் சுப்மான் கில்லுடன் இணைந்து அதிரடியாக விளையாடி அசத்தினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சுப்மான் கில், அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 49 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட், 28 பந்துகளில் 4 பவுண்ரி 3 சிக்சருடன் 49 ரன்கள் குவித்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சாம்சன் 7 பந்துகளில் 12 ரன்களும், ரின்கு சிங் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராசா, முசாராபோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 183 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், தொடக்க வீரரான மத்தவீரா ஒரு ரன்னிலும், மறுமணி 10 பந்துகளில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பெண்ணட் 4 ரன்களில் வெளியேறிய நிலையில், 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டைன் மெயர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். இதனால் ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் உயர்வை எட்டியது.
ஒருபுறம் டைன் மெயர்ஸ் சிறப்பாக விளையாடினாலும் மறுமுனையில், கேப்டன் சிக்கந்தர் ராசா 15 ரன்களிலும், சோம்பெல் 1 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விக்கெட் கீப்பர் மடன்டே, டைன் மெயர்ஸ்சுடன் ஜோடி சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சற்று அதிரடியாக விளையாடிய மடன்டே 26 பந்துகளில், 2 பவுண்டரி 2 சிக்சருடன் 37 ரன்கள் குவித்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய டைன் மெயர்ஸ் அரைசதம் கடந்த நிலையில், 49 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மசகட்சா 10 பந்துகளில் ஒரு பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் குவித்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் வீழத்தினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 4-வது போட்டி வரும் ஜூலை 13-ந் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“