சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Zimbabwe 4th T20I 2024 Live Score
இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் 152 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 46 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 153 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் – சுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுப்மான் கில் நிதானமாக விளையாட, மறுமனையில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக பயணித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக அசத்திய ஜெயஸ்வால் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் கில்லும் தனது பங்குக்கு அரைசதம் கடந்து அசத்தினார். தொடக்க ஜோடியை பிரிக்க ஜிம்பாப்வே அணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. 15.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த ஜெயஸ்வால், 53 பந்துகளில் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 93 ரன்களும், கில், 39 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தற்போது இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:-
ஜிம்பாப்வே: வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, பிரையன் பென்னட், டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஜோனாதன் காம்ப்பெல், ஃபராஸ் அக்ரம், கிளைவ் மடாண்டே (விக்கெட் கீப்பர்), ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, கலீல் அகமது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“