West Indies vs India, 1st Test Tamil News: இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விண்ட்ஸர் பார்க் டொமினிசியா மைதானத்தில் புதன்கிழமை (ஜூலை 13) தொடங்கியது.
மேற்கிந்திய தீவுகள் அணி திணறல்
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பேட்டிங்-ஐ தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வெயிட், டேகனரைன் சந்தர்பால் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் சந்தர்பால் கிளீன் போல்டு ஆகி 12 ரன்னில் பெவிலியனுக்கு நடையை கட்டினார். அடுத்து வந்த ரேமோன் 2 ரன்னிலும், பிளாக்வுட் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அஸ்வின் அபாரம்
இந்த நிலையில் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் 20 ரன்னில் நடையை கட்ட அலிக் அத்தானாஸ் (Alick Athanaze) நிலைத்து நின்று ஆடி 47 ரன்கள் குவித்தார்.
எனினும் மற்ற வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை. ஜோசுவா டா சில்வா 2 ரன்னிலும், ஜாஸன் ஹோல்டர் 18 ரன்னிலும் அல்ஸாரி ஜோசப் 4 ரன்னிலும் இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நடையை கட்டினர். அடுத்து வந்த கேமர் ரோச் 1 ரன்னிலும் வாரிகன் ஒரு ரன்னிலும் வெளியேறினர். எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்
64.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரகீம் கார்ன்வெல் 19 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் 1 விக்கெட்டும், ரவிச்சந்திர அஸ்வின் 5 விக்கெட்டும், சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் 1 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெயிஸ்வால் 40 ரன்களுடனும், ரோகித் சர்மா 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
2-வது நாள் ஆட்டம்
இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்து வரும் இந்திய அணி ரன் கணக்கை அதிகரித்துள்ளது. ஜெய்ஸ்வால் – ரோகித் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசிய நிலையில், தனது அறிமுக போட்டியில் விளையாடி வரும் யெஸ்ஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.
ஜெய்ஸ்வால், 215 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
இதேபோல் அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் ரோகித்தும் சதம் விளாசினார். 221 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோகித் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார்.
2ம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 162 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், கோலி 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
3-வது நாள் ஆட்டம்
3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இரட்டை சதத்தை நெருங்கிய ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், சதத்தை நெருங்கிய விராட்கோலி 76 ரன்கள் குவித்து வெளியேறினார். ரஹானே 3 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், ஜடேஜா 36 ரன்களுடனும், இஷான் கிஷன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில். ரோச், அல்சாரி ஜோசப், கார்ன்வெல், வாரிகன், அதனாசி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“