வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் கோலி, மயங்க் அகர்வாலின் பொறுப்பான ஆட்டத்தால், இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டுவென்டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. டெஸ்ட் தொடரிலும் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜமைக்காவில் இன்று ( ஆகஸ்ட் 30) துவங்கிய 2வது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவுற்றாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும். முதல் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்றதன் மூலம், அந்நிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் நேற்று ( ஆகஸ்ட் 30) துவங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
நிதான ஆட்டம் : துவக்க வீரர்களாக ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். ராகுல் 13 ரன்களில் ஹோல்டவர் பந்தில் வெளியற, மயங்க் அகர்வால் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்களில், ஹோல்டரிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.
கோலி அரைசதம் : புஜாரா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். ஹோல்டர் பந்தில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
"குண்டு"புயலில் சிக்கிய புஜாரா : வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஹீம் கார்ன்வால், நேற்றைய போட்டியில் அறிமுகமானார். 26 வயதான இவரின் தற்போதைய எடை 140 கிலோ. இந்திய வீரர் புஜாரா விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.
இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 42 ரன்களுடனும், பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், ஹோல்டர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.