சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
அதேநேரத்தில், 'பி' பிரிவில் மட்டும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அந்தப் பிரிவில், தற்போது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. எனினும், நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் தனது அரைஇறுதி வாய்ப்பை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதனால், 'பி' பிரிவில் 3 அணிகள் அரைஇறுதிக்கான போட்டியில் உள்ளன.
'ஏ' பிரிவில் உள்ள இந்தியா 'பி' பிரிவில் உள்ள அணியை தான் அரையிறுதியில் எதிர்கொள்ளும். தற்போது 'பி' பிரிவில் கடும் போட்டி நிலவுவதால் எந்த அணியை இந்தியா எதிர்கொள்ளப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பி பிரிவின் கடைசி இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தையும் எதிர்கொள்ள உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்றால், அந்த அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஒருவேளை, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையும்.
அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றாலும் கூட அந்த அணிக்கு அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நெட் ரன்ரேட் சாதகமாக இருந்தால் தான் நடக்கும். தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்து அதிக நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில், தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் நெட் ரன்ரேட் +2.140 ஆகவும், ஆஸ்திரேலியாவின் நெட் ரன்ரேட் +0.475 ஆகவும் இருக்கிறது.
அரைஇறுதியில் இந்தியா யாருடன் மோதும்?
நடப்பு தொடரில் வலுவாக தோற்றமளிக்கும் இந்தியா ஏற்கனவே இரண்டு வெற்றிகளுடன் அரையிறுதியை உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும். அப்படி முதலிடம் பிடிக்கும் அணி பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும்.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால், குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெறுவதோடு இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இந்தியா நியூசிலாந்திடம் தோற்று ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்திய அணி ஏ பிரிவில் இரண்டாவது இடம் பெற்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வென்று, இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும். இந்தியா நியூசிலாந்திடம் தோற்றால், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும்.
தென் ஆ ப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் தோல்வியடைந்து, ஏ பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும். ஒட்டுமொத்தத்தில், நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் வெற்றியும், பி பிரிவில் எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதைப் பொறுத்தும், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரையிறுதியில் மோதும்.